Published : 24 Jul 2023 06:04 AM
Last Updated : 24 Jul 2023 06:04 AM
சென்னை: கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.ந.செல்வக்குமார் தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, ‘‘செயற்கை நுண்ணறிவு துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி களைவழங்க பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி 1-2 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கால்நடை துறைவளர்ச்சி 7-8 சதவீதமாக உள்ளது.
பட்டினி இல்லாத உலகம்,வறுமை ஒழிப்பு, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு என முக்கியமான நிரந்தர வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் கால்நடை துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடை மருத்துவர்களுக்கான தேவை அதிகமாகஉள்ளது. இந்த வாய்ப்புகளைமாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
சென்னை புறநகர் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி ஆணையர் மு.க.தமிழ்வளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுவழங்கினார்.
அவர் பேசியபோது, ‘‘சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு, உள்ளுணர்வு, இரக்கம், சமூக உணர்வு, குழுவாக பிரச்சினைகளை கையாளுதல் ஆகிய 6 வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்’’ என்றார்.
கல்லூரி முதல்வர் இரா.கருணாகரன் ஆண்டு அறிக்கை வெளியிட்டார். இறுதிஆண்டு மாணவர் பு.அபிநாஸ் வரவேற்புரையும், இறுதிஆண்டு மாணவி பி.ஜொம்லிஷா நன்றியுரையும் நிகழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT