Published : 22 Jul 2023 06:09 AM
Last Updated : 22 Jul 2023 06:09 AM
சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 24-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திலான பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மற்றும் தேர்ச்சிப்பெறாதவர்களுக்கான துணைத்தேர்வு கடந்த ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 24-ம் தேதி மதியம் வெளியிடப்படும். இதையடுத்து தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாதவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அந்தந்த மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் ஜூலை 27, 28-ம் தேதிகளில் பதிவு செய்யலாம்.
மயிலாடுதுறை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற புதிய மாவட்டங்களில் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உயிரியல் பாடத்துக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.nic.in எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT