Published : 17 Jul 2023 05:10 AM
Last Updated : 17 Jul 2023 05:10 AM

உயர்கல்வி நிறுவனங்களில் புத்தகங்களை மொழிபெயர்க்க வழிகாட்டுதல்கள்: பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில், இந்திய மொழிகளில் புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி செயலர் மனீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசியக் கல்விக் கொள்கை 2020 அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகளை பிரபலப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுப்பது முக்கியமாகும். இந்தியாவின் வளமான மொழியியல் பாரம்பரியத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும். அதனடிப்படையில், உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் கற்றல் ஊடகமாக, தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியை மேம்படுத்துவது குறிப்பிடத்தக்க விதியாகும்.

இந்தப் பணியின் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் பாடத் திட்டங்களை இந்திய மொழிகளில் தயாரிப்பதால், மாணவர்கள் தங்களது தாய்மொழி அல்லது உள்ளூர் மொழிகளிலேயே தேர்வுகளை எழுத முடியும். எனவே, மாணவர்களுக்கு உள்ளூர் மொழி அல்லது தாய்மொழியில் கற்பிப்பதை ஊக்குவிப்பதுடன், உயர்கல்வி நிறுவனங்கள் பாடப் புத்தங்களை எழுதும்போது, விரிவான மொழிபெயர்ப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணிக்காக பல்கலைக்கழகங்கள் இயந்திர மொழிபெயர்ப்பு கருவிகளையும் பயன்படுத்தலாம். அதேநேரம், மொழியாக்கம் செய்யப்பட்ட பாடப் புத்தகங்களின் தரத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதையொட்டி, யுஜிசி இந்திய மொழிகளில் புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உயர்கல்வி நிறுவனங்களில், மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகங்களின் தரமும் உறுதிசெய்யப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x