Published : 14 Jul 2023 04:17 AM
Last Updated : 14 Jul 2023 04:17 AM

ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் 11,804 இடம்

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். உடன் உயர்கல்வி செயலர் ஏ.கார்த்திக், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் டி.ஜி.வினய், அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ், பொறியியல் சேர்க்கை செயலர் புருஷோத்தமன்.படம்: ம.பிரபு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்த மாத இறுதிக்குள் முடிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப பொறியியல் கலந்தாய்வுக்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான கால அட்டவணையை சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு கலந்தாய்வில் 430 பொறியியல் கல்லூரிகள் பங்கேற்கின்றன. கலந்தாய்வு மூலம் 1 லட்சத்து 57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3,100 இடங்கள் அதிகமாகும். கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 78,959 பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி தொடங்கி நடைபெறும்.

சிறப்பு பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும், மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 24 முதல் 26-ம் தேதி வரையும் கலந்தாய்வு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு, ஜூலை 28 முதல் செப்.3-ம் தேதி வரை நடைபெறும். இதற்கு முன்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு
4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் சுற்று ஜூலை 28 முதல் ஆக.9-ம் தேதி வரையும், 2-வது சுற்று ஆக.9 முதல் 22 வரையும், 3-வது சுற்று ஆக. 22 முதல் செப்.3 வரையும் நடக்கும்.

ஒவ்வொரு சுற்று முடிவடைந்த பின்னர் மாணவர்கள் கல்லூரியில் சேர 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் முழு கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். துணை கலந்தாய்வு மற்றும் எஸ்.சி. பிரிவு கலந்தாய்வு செப்.6 முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 236 இடங்கள் அதிகம். மேலும், தொழிற்கல்வியில் 3,143 இடங்கள் உள்ளன.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாவிட்டாலும், பொறியியல் கலந்தாய்வு நிச்சயம் நடைபெறும். மருத்துவ சேர்க்கைக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வில் காலியிடம் ஏற்பட்டால் அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தனியார் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலை.யில் உள்ள காலிப் பணியிடத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கல்லூரியில் இருந்து வேறு கல்லூரிக்கு செல்ல விரும்பினால்
அவர்கள் செலுத்திய கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி துறை செயலர் ஏ.கார்த்திக், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 2 பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இசிஇ அட்வான்ஸ் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, இசிஇ டிசைன் மற்றும் டெக்னாலாஜி ஆகிய பாடப்பிரிவுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x