Published : 12 Jul 2023 08:24 AM
Last Updated : 12 Jul 2023 08:24 AM
திருப்பூர் / கோவை: தமிழகம் முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் ‘தமிழ்மொழி கற்போம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று இத்திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மை செயலர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தாய் மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி, நம் தமிழ் மொழிதான். தமிழ் மொழியை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தர இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. திருப்பூரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணம் வெளிமாநில தொழிலாளர்கள்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக திருப்பூரில் 260 குழந்தைகளுக்கு அவர்களது தாய் மொழி மற்றும் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கிறோம். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ்மொழி கற்பிப்போம் திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ.71.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் ர.பாலசுப்பிரமணியன், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளியில் ஆய்வு: கோவை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு நேற்று காலை திடீரென சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை ஆசிரியரை அழைத்து பள்ளியில் மாணவர்களின் வருகையை கேட்டு அறிந்தார். பின்னர், 8-ம் வகுப்பு மாணவரை புத்தகம் வாசிக்க வைத்தார்.
மாணவர்கள் உபயோகப்படுத்தும் கழிவறையை பார்வையிட்டார். பின்னர், அதே பள்ளி வளாகத்தில் செயல்படும் வட்டார வள மையத்தை பார்வையிட்டு, சிறப்பு குழந்தைகள், ஆசிரியர்களிடம் உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, “பள்ளியில் சிதிலமடைந்த கட்டிடங்கள் உள்ளன. அதை இடித்துவிட்டு தரமான கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள சமையல் அறையை, மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் நேரடியாக பேசியதன் மூலம், அவர்களும் சிறப்பாக கல்வி கற்று வருவதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 97 சதவீதம் என உள்ளதை, 100 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT