Published : 11 Jul 2023 08:11 PM
Last Updated : 11 Jul 2023 08:11 PM
கோவை: சாதி, மதம் சார்ந்த அடிப்படை அடையாளங்களை பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு, சுயவிவரப் படிவத்தில் குறிப்பிடக் கூடாது என அனைத்து சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ, நர்சரி, பிரைமரி, விளையாட்டு பள்ளிகளின் முதல்வர்களுக்கும் தனியார் பள்ளிகளுக்கான கோவை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் செயல்பட்டு வரும் 9 தனியார் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு, சுயவிவர படிவத்தில் சாதி, மதம் சார்ந்த விவரத்தை குறிப்பிடுவதாக தனியார் பள்ளிகளுக்கான கோவை மாவட்ட கல்வி அலுவலரிடம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகர், மாவட்ட தலைவர் மா.நேருதாஸ் புகார் அளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கான கோவை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) அனைத்து சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்இ, நர்சரி, பிரைமரி, விளையாட்டு பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு, சுயவிவரப் படிவத்தில் சாதி, மதம் சார்ந்த விவரத்தை குறிப்பிடுவதாக புகார் மனு பெறப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் சமத்துவத்திற்கும், சகோரத்துவத்திற்கும், அறிவியல் முன்னேற்றமடைந்துள்ள இக்காலத்திய குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு தடையாக உள்ள சாதி, மதம் சார்ந்த அடிப்படை அடையாளங்களை பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாட குறிப்பேடு, சுயவிவரப்படிவத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் குறிப்பிடக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT