Published : 07 Jul 2023 10:44 PM
Last Updated : 07 Jul 2023 10:44 PM
மதுரை: காமராசர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணிமூப்பு பட்டியலில் புறக்கணிக்கப்படுகிறோம் என கவுரவ விரிவுரையாளர்கள் புகார் கூறியுள்ளனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி பல்கலைக்கழக வளாகம் மு.வ. அரங்கில் ஜூன் 25ல் தொடங்கியது. இப்பணியில் சுமார் 6 ஆயிரம் பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். பாடம் வாரியாக அந்தந்த துறை பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்துக்கின்றனர். இந்த பணியில் ஈடுவோருக்கு பணி மூப்பு பட்டியல் பின்பற்றப்படுவது வழக்கமாக இருந்தது.
ஆனால் இவ்வாண்டுக்கான பட்டியலில் ஆராய்ச்சி வழிக்காட்டி தகுதி, சுயநிதி கல்லூரி பேராசிரியர்களுக்கு முக்கியத்துவம் என்ற முறையில் தங்களை கடைசியாக கொண்டு வந்துவிட்டதாக கவுரவ விரிவுரையாளர்கள் புகார் கூறியுள்ளனர். இதுபற்றி தேர்வாணையர், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையில், சிலர் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 6ம் தேதி பகுதி-1 தமிழ் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்திருந்த பேராசிரியர்களின் பெயர் வாசிக்கப்பட்டபோது, பணி மூப்பு அடிப்படையில் பெயர் இடம் பெறவில்லை. இதுபற்றி சிலர் கேள்வி எழுப்பினோம். பல்கலைக்கழக நிர்வாக உத்தரவின்படி வாசிக்கப்பட்டது என விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பாளர் கூறினார். நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் முதலிலும், அரசு நிதியுதவி பெறும் கல்லூரியின் நிரந்தர ஆசிரியர்கள் 2வதும், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் 3-வதும் கடைசியாக நாங்கள் இருப்பதும் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பல்கலைக்கழக தேர்வாணை யரிடமும் முறையிட்டோம்.
கம்ப்யூட்டர் மூலமே பட்டியல் தயாரிக்கப்பட்டதால் ஒன்றும் செய்ய இயலாது என நிர்வாகம் தெரிவிக்கிறது. இதனால் வேறு வழியின்றி சிலர் திருத்தும் பணியை புறக்கணித்துள்ளோம். கடந்த 22ம் தேதி வணிகவியல் துறை விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஏற்பட்ட குளறுபடியால் சிலர் பணியில் ஈடுபடாமல் சென்றுள்ளனர். பிஎச்டி, ஸ்லெட், நெட் முடித்தவர்களை தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகம் பணியில் அமர்த்தியது. பலர் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்துள்ளோம். எங்கங்களை புறந்தள்ளாமல் முக்கியத்துவம் தரவேண்டும்" என்றார்.
பல்கலைக்கழக தேர்வாணையர் கூறுகையில், ‘‘இந்த முறை தகுதியின் அடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணிமூப்பு பட்டியல் கம்ப்யூட்டர் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களை பொறுத்தவரை ஒவ்வொரு 11 மாதத்துகும் பணி வழங்குதல் என்ற முறை இருப்பதால், நிரந்தரமானோர் என்ற கணக்கில் வராது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் விடைத்தாள் திருத்தும் பணியை பெரியளவில் புறக்கணிக்கவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT