Published : 07 Jul 2023 04:16 AM
Last Updated : 07 Jul 2023 04:16 AM
சென்னை: நிதி பற்றாக்குறையை சரிசெய்ய தமிழக அரசிடம் சிறப்பு நிதி வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி தெரிவித்தார்.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டம் 2010-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் தேர்வாகும் மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் இலவசமாக இளநிலை பட்டப்படிப்பு படிக்கலாம். ஆண்டுதோறும் சுமார் 250 மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் இலவச கல்வித் திட்டத்தின்கீழ் சேர்க்கைக்கு 218 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலவச கல்வித் திட்டம்: ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஏழ்மையினால் உயர்கல்வி படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு உதவிசெய்யும் விதமாக இலவச கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் மற்றும் பொருளாதார, குடும்ப பின்னணி அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் மாணவர்சேர்க்கை குறைந்ததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தமிழக அரசிடம் சிறப்புநிதி வழங்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளோம். இணையவழியில் படிப்புகளை பயிற்றுவிக்கும் திட்டத்துக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து சென்னை பல்கலை.யில் இணையவழி படிப்புகள்வரும் டிசம்பர் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் படிப்புகள் தொடங்கப்பட்ட பிறகு நிதி வருவாய் இருக்கும். இதுதவிர தொலைதூரக் கல்வியில் பிஎட் படிப்பை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளோம். சென்னை பல்கலைக்கழக பாடத்திட்டம் மற்றும் தொலைதூரக் கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT