Published : 05 Jul 2023 07:24 AM
Last Updated : 05 Jul 2023 07:24 AM

கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தர பல்கலை. மானியக் குழு உத்தரவு

சென்னை: கல்லூரி சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மனிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கல்லூரி சேர்க்கையை ரத்து செய்தபின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பதாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து யுஜிசிக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கல்லூரிகளில் சேர்ந்த பின் மாணவர்கள் சேர்க்கையை திரும்பப் பெற்றால் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் மற்றும் கட்டணங்களை திருப்பி அளிக்க வேண்டும்.

இது தொடர்பாக கடந்த ஜூன் 27-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற யுஜிசியின் 570-வது ஆய்வுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அதன்படி ஒரு மாணவர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சேர்க்கையை திரும்பப் பெற்றால் பிடித்தமின்றி வசூலித்த முழுக் கட்டணத்தையும் கல்லூரிகள் வழங்க வேண்டும். அதேபோல், சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் அதிகபட்சமாக அலுவல் பணிகளுக்காக
ரூ.1,000 மட்டுமே வசூலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் முழு கல்வியாண்டு அல்லது நடப்பு பருவத்துக்கான கட்டணத்தை பிடித்தம் செய்யக்கூடாது.

இதுதவிர கல்லூரிகளில் அக்டோபர் 31-ம் தேதிக்குப் பின்பு சேர்க்கை பெற்றவர்களிடம் கட்டணத்தை திருப்பி செலுத்தும்போது குறிப்பிட்ட காலம் வரையிலான கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்து மீதமுள்ள தொகையைத் தரவேண்டும். மேலும், மாணவர்களின் சான்றிதழ்களைத் தாமதிக்காமல் திருப்பித் தர வேண்டும். இல்லையெனில் சார்ந்த கல்லூரிகளின் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.ugc.gov.in/ எனும் வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x