Published : 28 Jun 2023 04:59 PM
Last Updated : 28 Jun 2023 04:59 PM

பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறைக்கு 5 ஆண்டுகளாக பேராசிரியர்கள் இல்லாத அவலம்

தருமபுரி: பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் 5 ஆண்டுகளாக நுண்ணுயிரியல் துறைக்கு பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு பி.எஸ்சி. நுண்ணுயிரியல் துறை தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த துறைக்கென பேராசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

இது குறித்து, இக்கல்லூரியில் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறியது: பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. நுண்ணுயிரியல் பாடப் பிரிவு பேராசிரியர்களே இல்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பி.எஸ்சி. விலங்கியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் தான் நுண்ணுயிரியல் துறை மாணவ, மாணவியருக்கும் வகுப்புகள் எடுப்பதாக தெரிகிறது. அதேநேரம், அந்தத் துறை மேலோட்டமான அடிப்படை அறிவை மட்டுமே மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர்.

நுண்ணுயிரியல் பாடப் பிரிவு சார்ந்த ஆய்வக செய்முறை பயிற்சிகள் எதையுமே இதுவரை மாணவ, மாணவியர் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் 50 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். இதுவரை 2 பேட்ச் மாணவ, மாணவியர் பேராசிரியர்கள் இல்லாமலே பட்டப் படிப்பை முடித்து வெளியேறி விட்டனர்.

பிற்காலத்தில் மருத்துவத் துறை சார்ந்த ஆய்வகங்களில் பணியாற்ற வேண்டிய மாணவ, மாணவியர் நுண்ணுயிரியல் துறை சார்ந்த அறிவை கற்றுக் கொள்ளாமலே இளநிலை அறிவியல் பாடத்தை முடித்து வெளியேறுவது வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டில் இந்த துறைக்கு நியமிக்கப்பட்ட 2 பேராசிரியர்களில் ஒருவர் ஒருசில வாரங்களிலேயே வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.

மற்றொருவர் தொடர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைக்கு, துறை சார்ந்த பேராசிரியர்களை போதிய அளவில் நியமனம் செய்து இங்கு பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் காக்க மாவட்ட நிர்வாகமும், உயர் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x