Published : 28 Jun 2023 02:57 PM
Last Updated : 28 Jun 2023 02:57 PM
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே சாலை வசதி இருந்தும் பேருந்து இயக்கம் இல்லாததால், வனப்பகுதி வழியாக மாணவர்கள் 4 கிமீ தூரம் அச்சத்துடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் கெட்டூர். இங்கு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொம்மதாதனூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமத்துக்குச் செல்ல சாலை வசதியிருந்தபோதும், பேருந்து இயக்கம் இல்லாததால், கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் தினசரி அடர்ந்த வனப்பகுதி வழியாக அச்சத்துடன் நடைபயணமாகப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4 கிமீ தூரத்தில் உள்ள பொம்மதாதனூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குக் கல்வி பயில சென்று வருகின்றனர். ஆனால், பொம்மதாதனூர் கிராமத்துக்குச் செல்ல பேருந்து இயக்கம் இல்லை. இதனால், தினமும் அடர்ந்த வனப்பகுதி வழியாகப் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
இந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், தினசரி மாணவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலையுள்ளது. சில நேரங்களில் மாணவர்களை, யானைகள் துரத்திய சம்பவமும் நடந்துள்ளன. எனவே, கிராமப் பகுதி மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எங்கள் கிராமத்தில் அரசுப் பள்ளி, மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராமப் பகுதி மாணவர்கள் கல்வியறிவு பெற பல்வேறு இன்னல்களையும், சவால்களையும் கடந்தே சாதிக்கும் நிலை இருப்பதை உணர்ந்து, மாணவர்களின் அறிவாற்றலுக்கு தடையாக இருக்கும் 4 கிமீ தூரம் பேருந்து இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT