Last Updated : 21 Jun, 2023 07:21 PM

 

Published : 21 Jun 2023 07:21 PM
Last Updated : 21 Jun 2023 07:21 PM

பணியாற்ற மறுக்கும் ஆசிரியர்கள்... காரைக்கால் பிராந்தியம் என்றால் இளப்பமா? - பெற்றோர்கள் வேதனை

காரைக்கால்: காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களை புதுச்சேரிக்கு மாற்ற வேண்டும் எனவும், புதுச்சேரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் காரைக்காலுக்கு பணியாற்ற வர மறுப்பதும் காரைக்கால் மாணவர்களின் கல்வி நிலையை பாதிக்கும் வகையில் உள்ளதாக பெற்றோர்கள், கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில், காரைக்கால் பிராந்தியம் பல்வேறு துறைகளில் புறக்கணிக்கப்படுவதால், வளர்ச்சியில் பின் தங்கியிருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அண்மைக்காலமாக கல்வியிலும், மருத்துவத்திலும் பெருமளவில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில், காரைக்கால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்திருந்தது பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காரைக்காலில் பணியாற்றி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 124 பேரை உடனடியாக புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறி அண்மையில் புதுச்சேரியில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும், புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் காரைக்கால் வர மறுப்பதும் காரைக்கால் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தங்களை புதுச்சேரிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதன் அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி 124 பேரை புதுச்சேரிக்கும், புதுச்சேரியிலிருந்து 90 ஆசிரியர்களை காரைக்காலுக்கும் மாற்றம் செய்து கல்வித் துறை உத்தரவிட்டது.

ஏற்கெனவே 20 சதவீதம் அளவில் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், 124 பேரை இடமாற்றம் செய்துவிட்டு, 90 பேர் மட்டும் காரைக்காலுக்கு மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து அப்போதே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் அந்த 90 பேரும் காரைக்காலுக்கு வர மறுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தற்போதைக்கு பணியிட மாற்ற உத்தரவு அமல்படுத்தப்படாமல் உள்ளது.

தற்போது கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த 124 ஆசிரியர்கள் மட்டுமல்லாது, காரைக்காலில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலரும் புதுச்சேரிக்கு செல்ல வேண்டும் என்ற மன நிலையில் இருப்பதும், புதுச்சேரியைச் சேர்ந்தோர் காரைக்காலுக்கு வர மறுக்கும் மன நிலையில் இருப்பதும் மாணவர்களின் கல்வி நிலையை பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்துள்ளதா என தெரியவில்லை.

இத்தகைய மனப்போக்குடன் உள்ள ஒரு ஆசிரியர் காரைக்காலைச் சேர்ந்த மாணவர்களுக்கு எப்படி முழு மனதுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்வி போதிக்க முடியும்? அதுமட்டுமில்லாமல், காரைக்காலுக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் மருத்துவர்களும், செவிலியர்களும் இங்கு பணியாற்ற முன் வருவதில்லை. காரைக்கால் என்றாலே இரண்டாம் தரமாக கருதும் போக்கு அலுவலர்கள், ஆட்சியாளர்கள் பலர் மத்தியில் இருக்கிறது.

ஒரு மாநிலத்துக்குள்ளேயே இத்தகைய வேறுபாடான போக்கு நாளுக்கு நாள் அதிகரிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆசிரியர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கி, காரைக்காலை இரண்டாம் தரமாக கருதும் மனப்போக்கை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கல்வி நிலையை கருத்தில் கொண்டு தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை சிக்கலை தீர்க்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்காலில் பணியாற்ற மறுக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதே கருத்தை பெற்றோர்கள், கல்வியாளர்கள் பலரும் முன்வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அ.குலோத்துங்கனிடம் கேட்டபோது, ‘‘மாணவர்களின் படிப்பு பாதிக்காத அளவில் அரசு முடிவெடுக்கும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x