Published : 19 Jun 2023 04:39 AM
Last Updated : 19 Jun 2023 04:39 AM

நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 650 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு

கோப்புப்படம்

சென்னை: நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நாடு முழுவதும் 11.46 லட்சம் பேரும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் உட்பட 78,693 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளைவிட மதிப்பெண் விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 700 முதல் 720 வரை 31 பேரும், 650 முதல் 699 வரை 355 பேரும், 600 முதல் 649 வரை 1,133 பேரும், 500 முதல் 599 வரை 4,882 பேரும், 400 முதல் 499 வரை 7,833 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால், நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 3,982 (30.67%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகமாகும். 600 மதிப்பெண்களுக்கு மேல் 3 பேர் பெற்றுள்ளனர். மேலும், 501 முதல் 600 வரை 23 பேரும், 401 முதல் 500 வரை 127 பேரும், 301 முதல் 400 வரை 437 பேரும், 201 முதல் 300 வரை 651 பேரும், 107 முதல் 200 வரை 2,741 மாணவர்களும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், 2018-ல் அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேர், 2019-ல் 6 பேருக்கு மருத்துவப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. பின்னர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத தனி உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

அதன்படி, 2020-ல் 435 பேர், 2021-ல் 540 பேர், 2022-ல் 567 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. இந்தாண்டு அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், இடஒதுக்கீடு மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வாயிலாக 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x