Published : 18 Jun 2023 04:10 AM
Last Updated : 18 Jun 2023 04:10 AM

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்து தமிழ் திசை வழங்கும் அன்பாசிரியர் - 2022 விருதுக்கான தேர்வு: நேர்காணலில் ஆர்வத்துடன் ஆசிரியர்கள் பங்கேற்பு

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘அன்பாசிரியர்-2022’ விருதுக்காக, சென்னையில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்களிடம் கலந்துரையாடும் தேர்வுக்குழுவினர். (அடுத்த படம்) குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட தேர்வுக்குழு. படங்கள்: ம.பிரபு

சென்னை: மாணவர்களுக்கு தனித்துவமிக்க கல்வியை அளிப்பதுடன், மாறுபட்ட சிந்தனையுடன் செயல்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்க்கும் அர்ப்பணிப்புமிக்க, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களைக் கவுரவிக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘அன்பாசிரியர்’ விருது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 3-வது முறையாக ‘அன்பாசிரியர்-2022’ விருதுகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கவுள்ளது. இந்நிகழ்வை லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்து நடத்துகின்றன.

இது தவிர வர்த்தமானன் பதிப்பகம், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம், பொன்வண்டு மேட்டிக் லிக்விட், ரேடியோ சிட்டி ஆகியவையும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளன. இந்த விருதுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

அதில் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான முதல்கட்ட நேர்காணல் சென்னை ‘இந்து தமிழ் திசை' அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 60 பேர் பங்கேற்றனர். இந்த நேர்காணலுக்கு பேராசிரியர் ஆல்பர்ட் ராயன் சிறப்பு நடுவராக தலைமை வகித்தார். எழுத்தாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், பேராசிரியர் பிரான்சிஸ் உட்பட 10 பேர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்தனர்.

நேர்காணலில் பள்ளி வளர்ச்சியில் பங்கு, மாணவர் தனித்திறன் ஊக்குவிப்பு, வாசிப்பு பழக்கம், மாணவர் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் உட்பட பல்வேறு அம்சங்களை முன்வைத்து ஆசிரியர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதனுடன் ஆசிரியர்களின் செயல்பாடுகள் சார்ந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

ஆசிரியர்களிடம் வரவேற்பு: இது குறித்து சிறப்பு நடுவர் ஆல்பர்ட் ராயன் கூறும்போது, ‘‘அன்பாசிரியர் எனும் பெயரே விருதின் நோக்கத்தை தெளிவாக விளக்கி விடுகிறது. ஆசிரியர்களிடமும் இந்த விருதுக்கு அதிக வரவேற்புள்ளது. மாணவர்களிடம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்களே இந்த விருதுக்கு பொருத்தமானவர்கள்.

நேர்காணலில் ஆசிரியர்களின் திறன்களை தவிர்த்து அவர்கள் மாணவர்களுடன் எந்த அளவுக்கு இணக்கமாக உள்ளனர், வகுப்பறையில் பாலின சமத்துவம் உட்பட பல அம்சங்களை முன்வைத்து விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’’ என்றார். தேர்வுக்குழு உறுப்பினர்கள் பத்மினி விஸ்வநாதன், பிரான்சிஸ் ஆகியோர் கூறும்போது, ‘அன்பாசிரியர் தேர்வு வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது.

இந்த நேர்காணலில் சமூகம், தொழில்நுட்பம், புதிய சிந்தனைகள், மாணவர் நலன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இது மற்ற ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும்’’ என்றனர்.

நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் சு.இளங்கோவன், ந.வேல்குமார் ஆகியோர் கூறும்போது, ‘‘இந்து தமிழ் திசை நாளிதழ், சமூகத்துக்கு தேவையான கருத்துகளை, செய்திகளை ஆழ்ந்த அறிவுடன் வெளியிட்டு வருகிறது. அத்தகைய நிறுவனம் வழங்கும் அன்பாசிரியர் விருதையும் மதிப்புமிக்கதாகவே கருதுகிறோம். நேர்காணல் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் சிறப்பானதாக இருந்தன.

கற்பித்தலைத் தாண்டி ஒரு ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகளை உணர்த்துகிறது’’ என்றனர். இதற்கிடையே, மண்டல அளவிலான நேர்காணலில் தேர்வான ஆசிரியர்களுக்கு மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிக்கட்ட தேர்வு விரைவில் நடத்தப்படும். இதில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x