Published : 16 Jun 2023 03:58 PM
Last Updated : 16 Jun 2023 03:58 PM

தமிழ்நாடு வேளாண் பல்கலை. இளம் அறிவியல் படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூன் கடைசி வாரத்தில் கலந்ததாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பத்திருந்த முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதல் இடத்தையும், மதுரையைச் சேர்ந்த மாணவர் பி.ஸ்ரீராம் இரண்டாவது இடத்தையும், தென்காசியைச் சேர்ந்த மாணவி எஸ்.முத்துலெட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: 2023-2024ம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம் மூலம் இளம் அறிவியல் பட்டப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த கல்வியாண்டில் 5361 இடங்களை (உறுப்புக் கல்லூரிகளுக்கு -2555 + இணைப்பு கல்லூரிகளுக்கு – 2806) நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக 10.05.2023 முதல் 09.06.2023 வரை பெறப்பட்டு வந்தன.

இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுள் 36,612 பேர் தரவரிசைக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர். அவர்களுள் பெண் விண்ணப்பித்தாரர்களின் எண்ணிக்கை (21,384), ஆண் விண்ணப்பித்தாரர்களின் எண்ணிக்கை (12,333). ஆண் பெண் விகிதம் 580 : 1000.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5%) இடஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை அரசாங்கப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் EMIS எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வியாண்டில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 403 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர்களின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்.

தமிழ்வழியில் இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை (50 இடங்கள்) மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை (50 இடங்கள்) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ்வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீட்டில் 20 இடங்களுக்கு 309 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்று திறனாளி மாணவர்களுக்கு மொத்தம் 5% இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறைக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5% இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதல் இடத்தையும், மதுரையைச் சேர்ந்த மாணவர் பி.ஸ்ரீராம் இரண்டாவது இடத்தையும், தென்காசியைச் சேர்ந்த மாணவி எஸ்.முத்துலெட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர், மாற்று திறனாளிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இடஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 2023 மூன்றாவது வாரத்தில் இருந்து தொடங்கப்படும் மற்றும் தகுதியானவர்கள் ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். இணையவழி கலந்தாய்வு மற்றும் பொது இடஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 2023 முதல் வாரத்திலிருந்து தொடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x