Published : 15 Jun 2023 02:56 PM
Last Updated : 15 Jun 2023 02:56 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் படிக்க விரும்புவோர் மாநில சுகாதாரத் துறை நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதி, அதில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஐந்து பாடங்களுக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம் தேர்வு நடக்கும். விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும். பிஎஸ்சி நர்சிங் நான்கு ஆண்டு படிப்புக்கு பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் விண்ணப்பித்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்கள் பெற்று வந்தனர்.
தற்போது நடப்பு கல்வி ஆண்டில் டெல்லியில் உள்ள நர்சிங் கவுன்சிலிங் புதிய விதிமுறைகளை வைத்துள்ளது. அதன்படி புதுவை மாநில அரசு செவிலியர் கல்லூரி (மதர் தெரசா) மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் செவிலியர் கல்லூரிகள் ஆகியவற்றில் நர்சிங் படிக்க புதிய விதிமுறைகளை வைத்துள்ளது.
அதன்படி புதுச்சேரி சுகாதாரத் துறையால் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வை எழுதி அதில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு நர்சிங் படிப்புக்கான இடங்களை சென்டாக் கலந்தாய்வின் மூலம் பெற வேண்டும்.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு இன்று பிறப்பித்துள்ள உத்தரவு, "புது டெல்லியிலுள்ள இந்திய நர்சிங் கவுன்சில் அறிவிப்புப்படி புதுச்சேரியிலுள்ள அனைத்து அரசு, தனியார், நிகர்நிலை செவிலியர் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 11, 12ம் வகுப்புகளின் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் செவிலியர் படிப்புக்கான தகுதி கண்டறிதல் பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கும், ஐந்து பாடங்களுக்கும் தலா 20 மதிப்பெண்கள் தரப்படும்.
தேர்வு தேதி முடிவுகள் தொடர்பான பிற விவரங்கள் சுகாதாரத் துறை இணையத்தளத்தில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி புதுச்சேரி மாணவ மற்றும் பெற்றோர் நலவாழ்வு சங்க தலைவர் பாலாவிடம் கேட்டதற்கு, " பொருளாதாரத்தில் பின் தங்கிய நலிவடைந்த ஏழை மாணவர்களின் லட்சிய கனவான நர்சிங் படிப்பு இதுவரை பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இருந்தது. இம்முறை இப்படிப்பில் சேர மாநில அரசால் நடத்தப்படும் நுழைவு தேர்வினை எழுதி அதன் அடிப்படையில் தான் நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் இது புதுச்சேரியில் உள்ள ஏழை குழந்தைகளை சிரமத்திற்கு உள்ளாகும்" என்று தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT