Published : 13 Jun 2023 04:23 PM
Last Updated : 13 Jun 2023 04:23 PM
கோவை: தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பள்ளிப் பேருந்துகள், வாடகை வாகனங்கள் மற்றும் பெற்றோர் துணையுடன் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள் நம்பியிருப்பது அரசுப் பேருந்துகளை மட்டுமே. எனவே, காலையில் பள்ளிக்குச் செல்லும்போதும், பள்ளிகள் முடிந்து வீடு திரும்பும்போதும், பேருந்து நிறுத்தங்களில் மாணவர்கள் கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.
பள்ளி மாணவர்கள் பயணிக்க அரசு இலவச பேருந்து பயண அட்டையை வழங்குகிறது. இருப்பினும், அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி, முடிவதால், பீக் ஹவரில் பேருந்து நிறுத்தங்களில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியமாக உள்ளது.
வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் மாணவர்கள் முண்டியடித்து ஓடிச்சென்று நெரிசலான பேருந்துகளில் ஏறுகின்றனர். ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் நின்றபடியும் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு, குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பேருந்து பயண திட்டத்தை அறிவித்துள்ளது கோவையைச் சேர்ந்த கோகுலம் தனியார் பேருந்து நிறுவனம்.
இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முருகேசன் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் 4 பேருந்துகளும் பள்ளிகள் அதிகம் உள்ள வழித்தடத்தில் இயங்கி வருகின்றன. எனவே, பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் திட்டத்தை அமல்படுத்தினால், நெரிசலான நேரத்தில் பலர் பயனடைவார்கள் என எண்ணினோம்.
எங்கள் பேருந்துகளில் அதிகபட்சம் ரூ.17 வரை டிக்கெட் உள்ளது. ஆனால், அனைத்து பள்ளி மாணவர்களும், எங்கள் பேருந்துகள் செல்லும் வழித்தடங்களில் சீருடையுடன் எங்கு ஏறி, இறங்கினாலும் ரூ.5 மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது.
4 பேருந்துகளில் பயணிக்கலாம்: உக்கடம் - கள்ளப்பாளையம் (பேருந்து எண்: 37), க.க.சாவடி - உப்பிலிபாளையம் (எஸ்2), ஆவாரம்பாளையம் - கோவைப்புதூர் (எஸ்14), ஒண்டிபுதூர் - மருதமலை (1சி) ஆகிய 4 வழித் தடங்களிலும் இயங்கும் பேருந்துகளில், இந்த திட்டம் குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கென விநியோகிப்பதற்காக கூடுதலாக ரூ.5 மதிப்புள்ள டிக்கெட்டுகள் நடத்துநர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் நேற்று (ஜூன் 12) முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. முதல் நாளில் மட்டும் 506 மாணவர்கள் பயனடைந்தனர். ஒன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளும் திறக்கப்பட்டபிறகு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT