Published : 13 Jun 2023 04:05 AM
Last Updated : 13 Jun 2023 04:05 AM
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தை ஜேஇஇ தேர்வர்களும் அவர்களின் பெற்றோரும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஐஐடியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர்கள் கலந்துரையாடவும் செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் சென்னை ஐஐடி வளாகத்தை பார்வையிட்டு ஒரு சிறப்பு அனுபவம் பெறும் வகையில் செயல்விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்வில் ஜுன் 17 மற்றும் 18-ம் தேதி ஆன்லைன் வாயிலாகவும், 24-ம் தேதி நேரடியாகவும் பங்கேற்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் visit.askiitm.com என்ற இணையதளத்தில் வருகிற 16-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். ஐஐடி வளாகத்துக்கு வரும் மாணவர்கள் வளாகத்தை பார்வையிடுவதுடன் தற்போது அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
ஆன்லைன் கலந்தாய்வு...: இது குறித்து ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி கூறுகையில், "எங்களுடன் உரையாடுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் தங்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில்கள் பெறலாம். மாணவர்கள் வளாகத்துக்கு வந்து, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு, அதன் பின்னர் ஆன்லைன் கலந்தாய்வில் தங்கள் விருப்பங்களை நிரப்பும் வாய்ப்பு இந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது" என்றார்.
ஆஸ்க் ஐஐடிஎம் (AskIITM)முன்முயற்சியாக, முன்னாள் மற்றும் தற்போதைய மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு இந்த செயல்விளக்க நாள் (Demo Day) நடத்தப்படுகிறது. askiitm.com என்ற இணையதளத்தில் பாடநெறி, ஆசிரியர்கள், வளாகச் சூழல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கேள்விகளை தேர்வர்கள் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களைக் கொண்ட குழுவினர் அவற்றுக்கு பதிலளிப்பர். ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதில்களையும் தேர்வர்கள் அவற்றில் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT