Published : 05 Jun 2023 02:48 PM
Last Updated : 05 Jun 2023 02:48 PM

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக க.அறிவொளி நியமனம்

சென்னை: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக க.அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக மு.பழனிச்சாமி என 5 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு I-ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி,பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணை வெளியிடுகிறது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் க.அறிவொளி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பணியிட மாறுதல் செய்யப்படுகிறார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (சமக்ர சிக்‌ஷா) கூடுதல் திட்ட இயக்குநர்-I வி.சி.ராமேஸ்வரமுருகன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக பணியிடமாறுதல் செய்யப்படுகிறார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பணியிடமாறுதல் செய்யப்படுகிறார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராகவும், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநரான பெ.குப்புசாமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலராகவும் பணியிடமாறுதல் செய்யப்படுகிறார். இவ்வாணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது’ என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும்... - பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டு, அதன் பொறுப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகளும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“பள்ளிக் கல்வி இயக்குநர் என்பது அதிகாரம் சார்ந்த பணியல்ல. மாறாக அனுபவம் சார்ந்த பணியாகும். சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கும் ஒருவர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர் என, பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குநர் பொறுப்பை நிர்வகிக்க முடியும்; இ.ஆ.ப. அதிகாரிகளால் நிர்வகிக்க முடியாது” என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து நந்தகுமார் இ.ஆ.ப சமீபத்தில் மாற்றப்பட்டதாலும், அந்தப் பொறுப்புக்கு உடனடியாக வேறு எவரும் அமர்த்தப்படாததாலும் பள்ளிக் கல்வித் துறையில் ஆணையர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் இயக்குநர் பதவி ஏற்படுத்தப்பட இருப்பதாக கல்வியாளர்கள், ஆசிரியர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி மீண்டும் நிரப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x