Published : 02 Jun 2023 04:26 PM
Last Updated : 02 Jun 2023 04:26 PM
புதுச்சேரி: மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியோடு, நல்ல ஒழுக்கமான நிலையில் வளர சாகச செயல்கள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
என்சிசி மாணவர் படையின் கடற்படை பிரிவு மாணவர்கள் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பாய்மர படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். 25 மாணவிகள் உள்பட 60 பேர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது சாகசப் பயண தொடக்க நிகழ்ச்சி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு கடல் சாகச பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: ''மாணவர் பருவத்திலேயே அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பில் மாணவர்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தேசிய மாணவர் படை செயல்பட்டு வருகிறது. இளம் வயதில் நாட்டுப்பற்றை உண்டாக்கும் நிலையில் இவை இருப்பதை நாம் காணலாம். 11 நாட்கள் கடலில் சாகச பயணம் மேற்கொள்வது என்பது எளிதான ஒன்று அல்ல. இந்த பயணத்துக்கு துணிவு வேண்டும். இதன் மூலம் சிறந்த அனுபவம் கிடைக்கும்.
பிள்ளைகள் தங்களை இளம் வயதில் நல்வழிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இளம் வயதில் தங்களுடைய எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளும்போது நிச்சயம் அவர்களின் வாழ்க்கை செம்மையாக இருக்கும். மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியோடு, நல்ல ஒழுக்கமான நிலையில் வளர இதுபோன்ற செயல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளம் வயதில் கற்பது தான் மனதில் ஆழமாக பதியும். ஆகவே மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு படித்து அவர்களின் வளர்ச்சியை கல்வி மூலம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. மேலும் சிறந்த கல்வியை கொடுக்கவும் அரசு ஆர்வம் காட்டி வருகிறது'' என்றார்.
இதில் தேசிய மாணவர் படை குரூப் கமாண்டன்ட் சோம் ராஜ் குலியா மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 302 கிலோமீட்டர் தூரத்தை கடக்கவுள்ள இந்த பாய்மர படகு சாகசப் பயணம் புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் வரையில் சென்று, மீண்டும் அதே வழியாக புதுச்சேரி வந்தடைகிறது. இந்தக் குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம், மரம் நடுதல், கடற்கரை தூய்மைப் பணித் திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT