Last Updated : 15 Jun, 2024 07:45 PM

 

Published : 15 Jun 2024 07:45 PM
Last Updated : 15 Jun 2024 07:45 PM

குவைத்தில் உயிரிழந்த ராமுவின் உடல் சொந்த ஊரில் தகனம்: பொதுமக்கள் அஞ்சலி

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட வருவாய் அலுவலர்.

ராமநாதபுரம்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமுவின் உடல் சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்பத்தாரிடம் தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் உள்ளிட்ட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த 45 பேரின் உடல்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி ஆம்புலன்சுகள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு (64) என்பவரின் உடல் நேற்று (ஜூன் 14) நள்ளிரவு அவரது சொந்த கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்ததும் அவரது மனைவி குருவம்மாள், மகன் சரவணக்குமார், மகள் சத்யா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர். அதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டின் அருகில் வைக்கப்பட்டது.

அதனையடுத்து இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழக முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர், ராமுவின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசன், பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி, போகலூர் ஒன்றியக் குழு தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ராமுவின் உடல் அக்கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x