Published : 15 Jun 2024 07:49 PM
Last Updated : 15 Jun 2024 07:49 PM
கரூர்: நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற காரணத்தால் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிலமோசடி புகார் வழக்கின் விசாரணை, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகிய 4 பேர் வந்திருந்தனர். மேற்படி சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.
அதன்பிறகு, அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் நேரில் என்னிடம் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று கடந்த மே 10-ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனு அளித்தார்.
இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தானும் கைது செய்யப்படலாம் என நினைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு கடந்த ஜூன் 12-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் அளித்துள்ளார். இதையடுத்து சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை மீண்டும் ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT