Last Updated : 14 Jun, 2024 06:29 PM

 

Published : 14 Jun 2024 06:29 PM
Last Updated : 14 Jun 2024 06:29 PM

வையாவூரில் 20 பேருக்கு வயிற்று போக்கு; இரு மூதாட்டிகள் உயிரிழப்பு - ஊராட்சி செயலர் இடைநீக்கம்

வையாவூர் பகுதி மருத்துவ முகாமை ஆய்வு செய்யும் எம்.பி க.செல்வம், மற்றும் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூரில் 20 பேருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 2 மூதாட்டிகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த ஊராட்சி செயலர் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் இறைக்கப்பட்டு அதன் பின்னர் பொதுமக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்பட் குடிநீரையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு வயிற்றுப் போக்கு இருந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, மற்றும் அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 12-ம் தேதி வையாவூர், எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசுவிணி (75) என்பவர் திடீரென்று உயிரிழந்தார், இதேபோல் பெருமாள் மனைவி சரோஜா (80) என்பவரும் நேற்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பலருக்கம் வயிற்று போக்கு ஏற்பட்டதால் 20-க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியல் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் எம்பி-யான க.செல்வம், எம்எல்ஏ-வான சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் அந்தப் குதியில் ஆய்வு செய்தனர். இதையடுத்து குடிநீரை குளோரினேற்றம் செய்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் வயிற்றுபோக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பா நடைபெறும் ஆட்டோ பிரச்சாரம்.

சுகாதாரமற்ற தண்ணீர் இந்த வயிற்று போக்குக்கு காரணமாக இருக்கலாம் என்பதால் தண்ணீர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைதக் தொடர்ந்து குடிநீரை குளோரினேற்றம் செய்து விநியோகிக்காத காரணத்தால் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிளை ஊராட்சி) வையாவூர் ஊராட்சி செயலர் கே.பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, வையாவூர் பகுதியில் மூதாட்டிகள் இருவர் இறப்புக்கு வயிற்று போக்கு காரணம் அல்ல என்று மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஏற்கெனவே வயது முதிர்வு காரணமாக நோய்வாய் பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பொதுமக்களுக்கு குளோரினேற்றம் செய்த குடிநீரையே வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை அனுக வேண்டும். சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் நீர் இழப்பை சரி செய்யும் வகையில் இளநீர், சோறு வடித்த கஞ்சி, உப்பு - சர்க்கரை கரைசல், மற்றும் மருத்துவமனையில் வழங்கப்படும் ஓஆர்எஸ் கரைசல் ஆகியவற்றை குடிக்க வேண்டும்.

நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். ஈ மொய்க்கும் பண்டங்களை உண்ணக் கூடாது” என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கருத்துக்களை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாநகராட்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x