Last Updated : 15 Jun, 2024 04:56 PM

 

Published : 15 Jun 2024 04:56 PM
Last Updated : 15 Jun 2024 04:56 PM

கோவை அருகே பெண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

உயிரிழந்த புலி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் 9 வயதுடைய பெண் புலி உயிரிழந்தது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மூன்று மாநிலங்களின் வனப்பகுதியை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகம் உள்ளது. அதனால் இப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.

இந்த நிலையில் நேற்று மாலை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட உளியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஆற்றின் ஓரத்தில் 9 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த பெண் புலியின் உடலை உடற்கூராய்வு செய்தனர். அதன் பிறகு புலியின் உடல் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

இதுகுறித்து பேசிய வனத்துறையினர், “இறந்த பெண் புலி, வேறொரு வனவிலங்குடன் ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம். இருந்தபோதும் பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் புலி இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x