Published : 17 Jun 2024 12:29 PM
Last Updated : 17 Jun 2024 12:29 PM
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பிறந்து 25 நாளான குழந்தையை குரங்கு கடித்துக் குதறிய நிலையில், அக்குழந்தைக்கு 14 தையல் போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அக்குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜய சங்கீதன். இவரது மனைவி வினோதினி. இவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 25 நாள் ஆகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூன்.16) மதியம் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்த வினோதினி வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது குடியிருப்புப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த குரங்கு ஒன்று வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அக்குழந்தையை கடித்துக் குதறி விட்டு ஓடிவிட்டது. இதில் குழந்தையின் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் னோதினி மற்றும் விஜய சங்கீதன் குழந்தையை மீட்டு ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு 14 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விஜய சங்கீதன் வினோதினி மற்றும் கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பெரியவர்களை அச்சுறுத்தி குரங்குகள் கடிக்கும் முன்பே அவற்றைப் பிடித்து காப்பு காட்டி விட வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT