Published : 16 Jun 2024 09:18 AM
Last Updated : 16 Jun 2024 09:18 AM

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையுடன் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி இணைப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் இணைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4-வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், துணை முதல்வர் புஷ்பா, மருத்துவமனை கண்காணிப்பாளர் திருவேங்கட செந்தில்குமார், மருத்துவ தொடர்பு அலுவலர் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

100 மருத்துவ இடங்கள்: விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 100 மருத்துவ இடங்கள் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்ட இம்மருத்துவக் கல்லூரி, சட்டப்பேரவை கூட்டுவதற்கு கட்டப்பட்ட இந்த அரங்கில் தற்போது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல் மாணவர்கள் பயிற்சி பெறவோ, சிறப்பு சிகிச்சை அளிக்கவோ, இந்த கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை.

அதனால், இங்கு படிக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு, கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. முழு உடல் பரிசோதனை மையத்தில் ரூ.85 லட்சத்தில் கருவி வழங்கப் பட்டுள்ளது.

புதிய பரிசோதனை கருவி: பன்றி காய்ச்சல், டெங்கு, எலி காய்ச்சல், சிக்குன்குனியா, நிபா உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியில் புதிய பரிசோதனை கருவி கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதனால், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இணைக்கப்படவுள்ளது.

9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 100 இடங்களுடன் சேர்த்து கூடுதலாக 50 இடங்கள் கேட்டு பெறுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விண்ணப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x