Published : 15 Jun 2024 04:03 PM
Last Updated : 15 Jun 2024 04:03 PM
கோவை: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதை கொண்டாடடும் வகையில், முப்பெரும் விழா நடத்த திமுகவினர் முடிவு செய்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தல் உட்பட தொடர்ந்து வெற்றிகளை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவில் திமுக கூட்டணிகளின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசுகின்றனர். தவிர, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு: இவ்விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை மதியம் கோவை வந்தடைந்தார். அவரை எ.வ.வேலு, முத்துசாமி, டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திரண்டு வரவேற்றனர். தொடர்ந்து திமுக கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து பிரத்யேக வேன் மூலம் முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு, அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று ஓய்வு எடுத்தார். தொடர்ந்து மாலை நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாதுகாப்பு வளையத்தில் கோவை: திமுக முப்பெரும் விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி ஆகியோரது தலைமையில் 2 டிஐஜிக்கள், 12 காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பி-க்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என 3,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT