Published : 14 Jun 2024 09:31 PM
Last Updated : 14 Jun 2024 09:31 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கேபிகே ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில், அவர் எழுதியிருந்த மரண வாக்குமூல கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை தொடங்கியுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4-ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூரிலுள்ள தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும், ஜெயக்குமார் மனைவி, மகன்கள் உள்பட குடும்பத்தினரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி எஸ்பி முத்தரசி சில வாரங்களுக்குமுன் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் ஆய்வு நடத்தி வழக்கு விசாரணை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி ஆகிய மூவரும் நேற்று கரைசுத்துபுதூர் தோட்டத்தில் இரண்டரை மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக ஐஜி உள்பட சிபிசிகடி உயர் அதிகாரிகள் திருநெல்வேலியில் ஜெயக்குமார் வழக்கின் விசாரணை அதிகாரி உலகராணி மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஜெயக்குமார் எழுதியதாக வெளியான மரண வாக்கு மூலம் கடிதத்தில் முதல் நபராக இடம்பெற்றுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த ராஜாவை சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்பாக வள்ளியூரில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது ஜெயக்குமாருடன் இருந்த தொடர்பு குறித்து ஆனந்த ராஜா தனது விளக்கத்தை எழுத்துபூர்வமாக அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ஆனந்த ராஜாவிடம் பாளையங்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீஸார் அடுத்தடுத்து விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT