Published : 14 Jun 2024 09:12 PM
Last Updated : 14 Jun 2024 09:12 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டதில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்த இரண்டு கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தமாக சமோசா தயாரித்து டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரிக்கப்படுவதாக திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு புகார் வந்தது.
இதையடுத்து திண்டுக்கல் மாநகர் நல அலுவலர் டாக்டர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திண்டுக்கல் தெற்கு ரத வீதி, நாராயணபிள்ளை சந்து பகுதிகளில் உள்ள தங்கவேல், பரமசிவம் ஆகியோருக்குச் சொந்தமான சமோசா தயாரிக்கும் கூடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தரமற்ற எண்ணெய், கெட்டுப்போன உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவை கொண்டு சமோசா தயாரிப்பதை கண்டனர்.
உடனடியாக சமோசா தயாரிக்கும் பணியில் இருந்த பத்து நபர்களை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகள் அந்த சமோசா தயாரிப்பு கூடங்களுக்கு சீல் வைத்தனர். இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.5000 அபராதமும் விதித்தனர். இதையடுத்து, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வாங்கி உண்ணும் சமோசாக்களை தயாரிக்க இனி மாநகராட்சியின் அனுமதிபெற வேண்டும் என அனைத்து சமோசா தயாரிப்பாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT