Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

சிதம்பரம் நடராஜர் கோயில்: அடுத்து என்ன?

தீட்சிதர்களிடமே கோயில் நீடிக்க வேண்டும்; ஆனால், சீர்திருத்தம் தேவை

- அரவிந்தன் நீலகண்டன்

சிதம்பரம் கோயில் நிர்வாகம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சிதம்பரம் தீட்சிதர்களுக்கான வெற்றியாகக் கருதப்படுகிறது. எனவேதான், அவர்கள் பொறுப்பு இன்று இன்னும் அதிகமாகி உள்ளது. முக்கியமாக, அவர்கள் நீதிமன்றத்துக்கு அப்பால், தமிழகப் பொதுமனதில் தங்களைப் பற்றி உள்ள சில எதிர்மறைப் பார்வைகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

வரலாற்று ஆதாரங்கள் உண்டு

திருமூலர் (ஐந்தாம் நூற்றாண்டு) சிதம்பரத்தையும் சிவ தாண்டவத்தையும் ஆழமான சத்தியமாக முன்வைத்தார். லிங்க வழிபாட்டுக்கும் நடராஜ வழிபாட்டுக்குமான இணைப்பை திருமூலர் அளித்தார். ஏறத்தாழ இக்காலத்தைய முற்கால சோழனான கோச்செங்கணான் தில்லைவாழ் அந்தணர்களுக்கு இல்லங்கள் நல்கினான் என்கிறார் சேக்கிழார். சிதம்பரம் சமயக்குரவர் நால்வராலும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. சுந்தரரின் (எட்டாம் நூற்றாண்டு) ‘தில்லை வாழ் அந்தணர்’ மிகப் பிரபலம். பல்லவர் குலத்தைச் சார்ந்த ஐயடிகள் காடவர்கோன் (ஏழாம் நூற்றாண்டு) இயற்றிய சிவதளி வெண்பா, தில்லையைச் சிவதலங்களுள் முதன்மையாகக் குறிப்பிடுகிறது. பேரா.வெள்ளைவாரணர் இக்காடவர்கோனே முதலாம் பரமேச்சுவரவர்மன் என்கிறார். இவனே தன் சிவாலயத்தை முதன்முதலாக கற்றளியாகக் கட்டியவன். எனினும், சிதம்பரத்தில் பல்லவ கல்வெட்டுகள் கிட்டவில்லை. பிற்காலச் சோழர் தொடங்கி, விஜயநகரப் பேரரசர்கள், வீர பிரதாப முதலியார் வரையிலான கல்வெட்டுகள் கிடைக்கின்றன.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன், ஐந்தாம் நூற்றாண்டு கோச்செங்கணானே தில்லை மூவாயிரவர் மரபினை உருவாக்கியவன் எனக் கருதுகிறார். சிதம்பர மஹாத்மியமும்  உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட கோயில் புராணமும் சிதம்பரத்தை உருவாக்கியதாகக் கூறும் சிம்ம வர்மன் எனும் இரணியவர்மன் கௌடதேயன் எனக் கூறினாலும், இம்மன்னர் புலிக் கொடி உடையவர் என்றே கூறுகின்றன. எனவே, இரணியவர்மன் கோச்செங்கணானாகவே இருக்கக் கூடும்.

வீழ்ந்து எழுந்த தீட்சிதர்கள்

களப்பிரர் காலத்தில் தீட்சிதர் நிலை மங்கியது. பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர் காலத்தில் அது முக்கியத்துவம் பெற்றது. சோழர்கள் இவர்கள் கையால் முடிசூடினர்.

குறைந்தது 1,500 ஆண்டுகளாகத் தொடர்வது இம்மரபெனினும் இது மாற்றங்களே ஏற்படாத ஒன்றல்ல. 12-ம் நூற்றாண்டில் சேக்கிழார் தில்லை வாழ் அந்தணர்களையே ‘அகம்படி தொண்டு செய்வார்’ எனச் சொல்கிறார். ஆனால், 14-ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவம் தமது கோயில் புராணத்தில் தீட்சிதர் களையும் அகம்படிமையினரையும் தனித்தனியாக வகைப்படுத்துகிறார். ஆனால், தொடர்ந்து வேத நெறியனர் என்றே இவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ‘பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர்’ என சம்பந்தர் பாடுவது ஏழாம் நூற்றாண்டில். பதினொன்றாம் நூற்றாண்டில் நம்பி காடநம்பி ‘முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்’ என்று குறிப்பிடுகிறார். பதினைந்தாம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் ‘வேத நூன்முறை வழுவாமே தினம் வேள்வியாலெழில் புனை மூவாயிர மேன்மை வேதியர்’ எனப் பாடுகிறார். இத் திருப்புகழ் பாடல் பிரிட்டிஷார் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின்போது, நீதிமன்றத்தில் ஆதாரமாக்கப்பட்டது. அப்பாடலின் அழகால் ஈர்க்கப்பட்ட வ.த.சுப்பிரமணியப் பிள்ளை ஊர் ஊராகச் சென்று ஏட்டுப் பிரதிகளைச் சேகரித்து, திருப்புகழைக் காப்பாற்றினார். ஆக, திருப்புகழ் தமிழர்களுக்குக் கிடைக்க… சிதம்பர தீட்சிதர்கள் பிரச்சினை உதவியிருக்கிறது.

தீட்சிதர்களின் தியாகம்

அந்நியப் படையெடுப்பாளர்கள் 13-ம் நூற்றாண்டில், தில்லை கோயிலில் உள்ள செல்வங்களையும் உலோகச் சிலைகளையும் வேண்டி அங்குள்ள தீட்சிதர் களைக் கொலை செய்த காட்சியை விவரிக்கிறார், அப்படையெடுப்பில் உடனிருந்த அமிர்குஸ்ரூ. ‘நடராஜரின் ஆலயத்தில் தீட்சிதர்களின் தலைகள் வெட்டப்பட்டு நடனமாடின’ என்கிறார் (தாரிக்-இ-அலாய்). சித்தரவதைப் படுகொலைகளுக்குப் பின்னரும் மறைத்துவைக்கப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட வில்லை. சிதம்பரம் கோயிலுக்குள்ளேயே எட்டு சிலைகள் இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டிருந்ததைப் பின்னர் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் (ஜோப் தாமஸ், ‘திருவெண்காடு ப்ரோன்ஸ்’(Tiruvengadu Bronzes), க்ரியா, 1986). தீட்சிதர்களின் வரலாற்றுறவு என்பது கோயிலைக் காப்பாற்ற அவர்களால் செய்யப்பட்ட இத்தியாகங்களையும் உள்ளடக்கியதாகும். 1896-99 காலகட்டத்தில் சான்றோர் சமுதாய மக்களின் ஆலயப் பிரவேச உரிமைக்கு ஆதரவாக தீட்சிதர்கள் சாட்சியம் அளித்தமைக்காக பிரிட்டிஷ் நீதிபதிகளால் கடுமையான அவமதிப்புக்கு ஆளானார்கள். (தோள்சீலைக் கலகம், ‘சிஷ்ரி’ (SISHRI), 2010) சோழருடனான சான்றோர் சமுதாயத் தொடர்பு இங்கு சிந்திக்க வேண்டிய ஒன்று.

சமூகத் தேக்கநிலை

சமூகத்தின் தேக்கநிலைத் தீமைகளுக்கு தீட்சிதர்களும் விலக்கல்ல. தேக்கநிலையை எதிர்க்கும் சக்திகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயங்கின. மாலிக் கபூர் படையெடுப்பை ஒட்டிய குழப்பமான காலகட்டத்தில் செயல்பட்ட உமாபதி சிவாச்சாரியர் சாதி எல்லைகளைக் கடந்தவர். அவர் அனைவருக்கும் ‘பேதமற தீக்கை’ தந்த ஐதீகம் முக்கிய முன்னகர்வாகும். மெய்கண்ட பரம்பரை மறைஞான சம்பந்தரை குருவாக ஏற்றதால், உமாபதி சிவாச்சாரியாரை விலக்கிய தீட்சிதர்களே மீண்டும் திருக்கோயில் பூசனைகளுக்கு அழைத்தது மற்றொன்று. 13-ம் நூற்றாண்டில் இந்தப் புரட்சிகர நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது, இன்றைய தீட்சிதர்களுக்கும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் முக்கியமானது. சிதம்பரம் திருக்கோயில் ஜனநாயகத் தன்மையும் ஆன்மிகச் சூழலும் நிலவும் திருத்தலமாகத் திகழ இனவாத மோதல் போக்கை கைவிட்டு, அருள்-நேய சமன்வயப் போக்கினைக் கைகொள்வது அவசியம்.

வரலாற்றுப் படிப்பினை

‘மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர்’ எனக் கூறிய திருமூலர் தொடங்கி, ஆகம வைதீக நெறிப்பிளவுகளைத் தவிர்த்த உமாபதி சிவாச்சாரியார் எனத் தொடர்வது சமன்வயம், பன்மைகளை அவற்றின் தன்மைகள் இழக்காமல் கோக்கும் இயக்கம் மூலமாக மட்டுமே தீட்சிதர்களும் அவர்களை எதிர்ப்பவர்களும் கோயிலின் ஆன்மிக நலன் பேணும் புள்ளியில் இணங்கி முன்னகர இயலும். உச்ச நீதிமன்றம் தந்துள்ள வரலாற்றுப் படிப்பினை இதுதான்.

கோயிலுக்குள் நந்தனாருக்கும் சுவாமி சகஜானந்தருக்கும் திருவுருவச் சிலைகள் வைப்பதன் மூலம், தீட்சிதர்களே இந்த சமன்வய இயக்கத்தைத் தொடங்கலாம். தொடங்க வேண்டும்!

- அரவிந்தன் நீலகண்டன், எழுத்தாளர், சமூக விமர்சகர், தொடர்புக்கு: aravindan.neelakandan@gmail.com

கோயில் தீட்சிதர்களுடையது இல்லை; அரசு மீட்க வேண்டும்

- ரவிக்குமார்

‘சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அந்தக் கோயிலை நிர்வகிக்க தமிழக அரசு அதிகாரியை நியமித்தது செல்லாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் 1982-ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க. அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். எடுத்த நடவடிக்கையை, அவர் உருவாக்கிய அ.தி.மு.க. அரசே இன்று காப்பாற்றாமல்போனதுதான் வேடிக்கை.

வரலாறு சொல்வது என்ன?

நடராஜர் கோயில் தொடர்பாக 1885-லேயே வழக்கு நடந்திருக்கிறது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதிகள் முத்துசாமி அய்யரும் ஷெப்பர்டும் “சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்று சொல்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளனர் ( A.S.Nos.108 and 159 of 1888 Dt 17.3.1890). அதன் பின்னர், 1951-ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் அது தனிச் சொத்து அல்ல; பொதுவான கோயில்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையொட்டி, குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது, கோயிலை அரசின் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கு எனப் பிறப்பிக்கப்பட்ட ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது. அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற ராஜாஜியின் ஆட்சிக் காலத்தில், அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவருக்குப் பிறகு முதல்வரான காமராஜரின் ஆட்சியின்போது, அந்த மேல்முறையீட்டு மனு ஏனோ வாபஸ் பெறப்பட்டது. அதனால், அந்தக் கோயிலின் நிர்வாகம் தீட்சிதர்கள் வசமே தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர். நடவடிக்கை

நடராஜர் கோயிலில் நடைபெற்றுவந்த பல்வேறு முறைகேடுகள்குறித்துப் புகார்கள் தெரிவிக்கப்பட்டதால்தான் எம்.ஜி.ஆர். தலைமையிலான அரசு, நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தது. அந்த உத்தரவை ரத்துசெய்யும்படி தீட்சிதர்கள் கோரியபோது, சென்னை உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. 1997-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தீட்சிதர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் மீது தீட்சிதர்கள் தாக்கல்செய்த சீராய்வு மனுவும் 2006-ல் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதன் மீது 2009 பிப்ரவரியில் தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது செல்லும் எனத் தெளிவுபடுத்தியதோடு, நிர்வாக அதிகாரிக்கு ஒத்துழைப்புத் தருமாறு தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பையும் தீட்சிதர்கள் ஏற்காமல் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதுதான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தீர்ப்பு கிடக்கட்டும்; வாதம் சரியா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா தவறா என்பது ஒருபுறமிருக்கட்டும்; ‘தீட்சிதர்கள் தனித்த மதப் பிரிவினர், 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் நடராஜர் கோயிலை நிர்வகித்துவருகின்றனர்’ என்ற வாதம் எந்த அளவுக்குச் சரி?

சிதம்பரம் கோயில் தொடர்பான இன்றைய புனைவுக்கு அடித்தளமிட்ட பெரிய புராணத்தில், அக்கோயிலில் பூசை செய்தவர்கள் ’அந்தணர்’,’ மறையோர் ’ முதலான சொற்களாலேயே குறிக்கப்படுகின்றனர். அவர்களுக்கெனத் தனிப்பட்ட அடையாளம் எதுவும் அதில் விவரிக்கப்படவில்லை. எனவே, அவர்களைத் தனித்த பிரிவினராகக் குறிப்பிடுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் கோயில் இருந்ததற்கான எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது. இப்போதுள்ள மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும் வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும் கிழக்குக் கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனாலும், தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிங்கனாலும் எழுப்பப்பெற்றவை.

பௌத்த மையம்?

‘‘11- 12 ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் குறித்த செய்திகள் பெரும்பாலும் புராணக் கதைகள் மூலமாகவே அறியக்கிடைக்கின்றன’’ என பால் யங்கர் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். ( ‘தி ஹோம் ஆஃப் டான்சிங் சிவன்’, ஓயுபி,1995). அது ஒரு காலத்தில் பௌத்த மையமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர். களப்பிரர்களின் தலைநகராக சிதம்பரம் விளங்கியதாக வரலாற்றாய்வாளர் பி.நடராஜன் குறிப்பிடுகிறார் ( ‘தி சிட்டி ஆஃப் காஸ்மிக் டான்ஸ்: சிதம்பரம், ஓரியன்ட் லாங்மென், 1974).

முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினான். படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.

பராந்தகனுக்குப் பின்னர் வந்த சோழ மன்னர்கள், சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. குலோத்துங்கனது ஆட்சியில்தான் மீண்டும் சிதம்பரம் முக்கியத்துவம் பெறலாயிற்று. அவன் கம்போடிய மன்னன் தனக்கு அனுப்பிய அபூர்வமான ரத்தினக் கல்லை நடராஜர் கோயிலில் வைக்கச் செய்தான். தனது முன்னாள் படைத் தலைவனான நரலோக வீரனைக் கொண்டு சிதம்பரம் கோயிலில் பல்வேறு கட்டிடப் பணிகளை மேற்கொண்டான். கோயிலுக்கென ஏராளமான நிலமும் தானமாகத் தரப்பட்டது.

13-ம் நூற்றாண்டின் மத்தியில் சிதம்பரத்தை கோப்பெருஞ் சிங்கன் என்ற சிற்றரசன் கைப்பற்றிக்கொண்டான். அவன் பல்லவர் மரபைச் சேர்ந்தவனாவான். அதற்குப் பின்னர், சோழப் பேரரசை வென்ற சுந்தர பாண்டியன், சிதம்பரத்தில் பல பணிகளை மேற்கொண்டான். இப்படியாக, மூவேந்தரிடையே ஏற்பட்ட பகையும் அதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் சிதம்பரம் கோயிலில் அந்தணர்களின் ஆதிக்கம் வலுப்பெற வழிவகுத்தது. அதன் பின்னர்தான், சிதம்பரத்தை வடஇந்திய வைதீக மரபோடு பிணைத்து, சம்ஸ்கிருதத்தில் ஸ்தலபுராணம் எழுதப்பட்டது. ‘சிதம்பர மஹாத்மியம்’ என்ற அந்த நூலில், சிதம்பரம் எட்டு மைல் சம சதுரம் உள்ளதெனவும், அழகிய நான்கு கோபுரங்களைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுவதால், கோபுரங்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என யூகிக்கலாம்.

எப்போது தீட்சிதர்கள் வசமானது?

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் (1400 - 1700) சிதம்பரம் கோயில் தனது முக்கியத்துவத்தை இழந்தது. அக்காலத்தில் திருப்பதி, திருவண்ணாமலை, ரங்கம் ஆகியவையே முக்கியமான கோயில்களாக மதிக்கப்பட்டன. அரச ஆதரவு சைவத்திலிருந்து வைணவத்துக்கு மாறியது அதற்கொரு காரணமாகும். நாயக்கர் காலத்தில், அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சுயேச்சையாகச் செயல்பட்ட அந்தணர்கள், சிதம்பரம் கோயிலை எவ்விதத் தடையுமின்றித் தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்துவிட்டனர்.

இந்த ஆதாரங்களைக் கொண்டு பார்த்தால், சிதம்பரம் நடராஜர் கோயில் 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தீட்சிதர்கள் என இப்போது அறியப்படும் அந்தணர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்திருக்க வேண்டும். 2,000 ஆண்டுகளுக்கு முன் நடராஜர் கோயில் இருந்ததற்கோ, அதை தீட்சிதர்கள் கட்டினார்கள் என்பதற்கோ, நிர்வகித்தார்கள் என்பதற்கோ வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடையாது. இந்த வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துவைத்து, நடராஜர் கோயிலை மீண்டும் அரசு நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதே மக்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இன்றைய அரசு செய்யும் மரியாதையாக இருக்கும்.

- ரவிக்குமார், எழுத்தாளர், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர், தொடர்புக்கு:manarkeni@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x