Published : 08 Dec 2013 03:24 PM
Last Updated : 08 Dec 2013 03:24 PM
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகிய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.
ராஜஸ்தானில் காங்கிரஸை வீழ்த்தி மகத்தான வெற்றியுடன் ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக. அதேபோல், மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சி தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இழுபறி நிலை நீடித்து வந்த சத்தீஸ்கரில் காங்கிரஸை முந்திவிட்டு ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. டெல்லியில் அக்கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி மேற்கொண்ட சூறாவளிப் பிரசாரத்தின் எதிரொலிதான் இது என்கிற ரீதியில் சொல்கிறார், ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்கப் போகும் வசுந்தரா ராஜே.
மோடியை முன்னிருத்தியே இந்த வெற்றிக்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் பாஜக மூத்த தலைவர்கள்.
மாநில அரசுகள் மீது மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த முடிவுகள் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிரொலிகாது என அழுத்தமாகச் சொல்கிறார்.
இந்தத் தேர்தல் முடிவுகளிலேயே மிகவும் கவனிக்கத்தக்க எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது, ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் அக்கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்த ஓர் ஆண்டு காலத்தில், டெல்லியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும், நாடு தழுவிய அளவில் ஆச்சரியத்தையும் உண்டாக்கியிருக்கிறது ஆம் ஆத்மி.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்ற இறுதிப் போட்டிக்கு, அரையிறுதி ஆட்டமாகவே இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
சரி, ஒட்டுமொத்தமாக... உங்கள் பார்வையில், இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதிதான் என்ன?
விவாதிக்கலாம்... வாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT