Published : 18 Mar 2017 12:23 PM
Last Updated : 18 Mar 2017 12:23 PM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதிமுகவில் சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், தேமுதிகவுக்காக மதிவாணன், பாஜகவுக்காக கங்கை அமரன், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் தீபா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜெயலலிதா மறைந்த ஒரே மாதத்துக்குள்ளாகவே அதிமுகவில் சூறாவளி அடிக்கத் தொடங்கிவிட்டது. ராணுவக் கட்டுப்பாடு, இரும்புக் கோட்டை இப்படியெல்லாம் அறியப்பட்ட அதிமுக இப்போது சசிகலா அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கிறது.
இரட்டை இலை சின்னத்துக்கான போட்டா போட்டியும் நிலுவையில் இருக்கிறது. அதிமுகவுக்கு இந்தத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் மக்கள் மத்தியில் அதிமுக மீதான அபிமானம் சற்றும் குறையாமல் கட்டிக்காக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
அதிமுக நிலவரம் இப்படி இருக்க, திமுகவுக்கான சவால் ஸ்டாலினை நோக்கி பாய்வதாக இருக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எதிர்கொள்ளும் முதல் இடைத்தேர்தல். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் ஆட்சி அமைத்த உத்வேகத்திலிருக்கும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற கனவுடன் எதிர்கொள்ளும் தேர்தல். முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் எதிர்கொண்டு பலத்த பின்னடைவை சந்தித்த தேமுதிக மீண்டும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியுமா என முயற்சிக்கும் தேர்தல்.
ஜெயலலிதாவின் மறைவும், உடல்நலக் குறைவால் கருணாநிதி கொண்டுள்ள ஓய்வும் தமிழக அரசியல் களத்தில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் இந்தத் தேர்தல் மீது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
திராவிட இயக்க ஆட்சியின் 50 ஆண்டுகள் அனுசரிக்கப்படும் நிலையில் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் இன்று வந்தடைந்திருக்கும் ஒருவித தேக்க நிலையில் நடைபெறவிருக்கும் இத்தேர்தல் குறித்த உங்கள் பார்வை என்ன?
இத்தேர்தலில் அதிமுக, திமுக மீதான உங்கள் எதிர்பார்ப்பு என்ன? எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஓபிஎஸ்., அணி, தீபா பேரவை எதிர்காலம் குறித்த உங்கள் கணிப்பு என்ன. விவாதிக்கலாம் வாங்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT