Published : 03 Jan 2014 12:35 PM
Last Updated : 03 Jan 2014 12:35 PM
இராம.சீனுவாசன் எழுதிய ‘நிதிக்குழுச் சவால்கள்’ கட்டுரையின் தொடர்ச்சியான விவாதம்:
மத்திய அரசுக்கே அதிக நிதிச்சுமைகள் இருக்கும்; ஆகையால், நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கே அதிகப் பங்கு தேவைப்படும் என்கிறார் இராம. சீனுவாசன். கூட்டாட்சித் தத்துவத்தை இந்தியா எந்த அளவுக்கு வலியுறுத்துகிறதோ அதே அளவுக்குக் கூட்டாட்சி நிதிப் பகிர்வையும் நமது அரசியலமைப்புச் சட்டம் மூலம் வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டாட்சி நிதிப் பகிர்வை உறுதிப்படுத்துவதற்கு அந்தச் சட்டத்தின் 280-வது பிரிவு வழிவகுக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த நேரடி அதிகாரத்தில் அமைக்கப்பட்டதுதான் தேசிய நிதி ஆணையம். ஆனால், கூட்டாட்சி நிதிப் பகிர்வின் நோக்கங்கள் நடப்பில் நேர் எதிராகச் செயல்படுத்தப்படுவதுதான் துயரம்.
இந்தியாவின் ஆதாரம்
பன்மையில் ஒருமை என்பதுதான் இந்தியா. ஒவ்வொரு மாநிலமும் தனித்துவத்தைக் கொண்டுள்ளன. புவிசார் அடிப்படையில் அவற்றின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான இலக்குகள் வேறுபடுகின்றன. மாநிலங்களுக்கிடையே, ஒருவித ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான் அமைந்திருக்கிறது. இந்தியக் கூட்டமைப்பிலுள்ள இந்த மாநிலங்களின் நிலைமையை உணர்ந்துகொள்ளாமல் எவ்வாறு நிதிச் சமத்துவத்தை மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உருவாக்க முடியும்? அதற்கான சிறு முயற்சிகள்கூட இந்தியக் கூட்டாட்சியில் இல்லை. இதன் விளைவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதைச் சிந்திக்க மறுக்கிறது மத்திய அரசு.
வரிப் பகிர்வைவிட வரி சேகரிப்பில்தான் நிதி ஆணையம் கூடுதல் கவனம் செலுத்துகிறது. உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு கடுமையான நிர்ப்பந்தங்களைக் கொடுத்து, நிதியைத் திரட்டுவது என்பதில் இந்தக் கூடுதல் கவனம் இருக்கிறது. மக்கள் முன்னேற்ற நல அரசு என்றால், அடித்தள மக்களை அடிப்படையாகக் கொண்டு வரிப் பகிர்வுக் கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
மாநிலங்களும் சொந்த அரசியல் காரணங்களுக்காக நிதியை ஆக்கபூர்வமற்ற செயல்களுக்குப் பயன்படுத்தா மல் விரயமாக்குகின்றன என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்துத் தனியே யோசிக்க வேண்டும். ஆனால் வரிச் சுமையை மாநிலங்களின் தலையில் சுமத்தினால், இதனால் கழுத்து முறிந்துபோவது சாதாரணமான மக்களுக்குத்தான்.
நிதிக்குழுவின் கெடுபிடி
இந்தச் சூழலில் தேசத்தின் நிதி முதலீட்டு வசதியைப் பெருக்க வேண்டும் என்பது இன்றைய முக்கியக் கடமை என்று நிதிக் குழு வற்புறுத்துகிறது. இதற்கு மாநிலங்கள் ஒத்துழைக்காவிட்டால் அரசியல் சட்டத்தின் 275-வது பிரிவைப் பயன்படுத்தி, மாநிலங்களின் நிதிப் பங்கை நிறுத்தவும் முடியும் என்று எச்சரிக்கவும் செய்கிறது. மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைப் பற்றாக்குறை அளவு 3%-க்கும் கூடுதலாக இருக்கக் கூடாது என்பதும் இப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் ஒன்றாகும். இதைக் கடைப்பிடிக்காவிடில் மத்திய அரசின் ஒதுக்கீட்டை இழக்க நேரிடும் என்றும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 275 பயன்படுத்தப்படும் என்றும் அஞ்சும் மாநில அரசுகள் பற்றாக்குறையை உயராமல் பார்த்துக்கொள்கின்றன.
இந்தக் கொள்கைத் திணிப்பின் விளைவு- வேறு வழியில்லாமல் விவசாயம், கல்வி, மருத்துவம், இதர நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன (இந்த ஆண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைப் பற்றாக்குறை 4.8% என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியது).
மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியை வழங்குவதன் மூலம்தான், நிதிச் சமத்துவத்தை உருவாக்க முடியும். ஒட்டுமொத்த வரிவிதிப்பில், மாநிலங்களுக்குக் கணிசமாக வழங்க வேண்டியது அவசியமானது. இதற்கான தேவையும் மாநில அரசுகளுக்கு இருக்கிறது. நிகர வரி வருவாயில் 32%-ஐ மாநில அரசுகளுக்கு வழங்கும் இன்றைய நடைமுறையை மாற்றி, ஒட்டுமொத்த வருவாய் என்றால், 50% என்றும் நிகர வரிவருவாய் என்றால், 60% என்றும் வழங்க வேண்டும் என்றும் சில மாநில அரசுகள் கோருகின்றன. நிதிப் பகிர்வில் உண்மையான கூட்டாட்சிக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தால்தான், இந்தியாவால் ஒருமைப்பாடு கொண்ட கூட்டாட்சியை எட்டிப்பிடிக்க முடியும்.
கட்டுரையாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர்,
தொடர்புக்கு: thamarai_mahendran@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT