Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM
சமஸ் எழுதிய ‘கொலைக்குற்றமா கருக்கலைப்பு?’ கட்டுரையின் தொடர்ச்சியான விவாதம்.
இந்தியாவில் கருக்கலைப்பால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான மரணங்களுக்கு இந்திய மருத்துவச் சமூகத்தை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் சமஸ்.
ஒரு பெண் தனக்குக் குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை பெண்ணுக்கே உரிதானது. இந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் சட்டரீதியாக இருக்க வேண்டும். பெண்களின் இந்த உரிமையைச் சமூகமும் அங்கீகரிக்க வேண்டும். அந்த உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு வசதிகள், எளிதாக உரிய நேரத்தில் பெறக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். அவை தரமானவையாகவும் கட்டணமற்றவையாகவும் இருக்க வேண்டும்.
இந்த உரிமைகள் இந்தியப் பெண்களுக்குச் சட்டரீதியாக இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு வெறும் சட்ட உரிமையாக மட்டுமே இந்த உரிமை இருக்கிறது.
ஆணாதிக்கச் சமூகமே காரணம்
இதற்குக் காரணம் இன்றைய ஆணாதிக்கச் சமூக அமைப்பும் குடும்பச் சூழலும் பெண்களின் இந்த உரிமை களுக்கு எதிராகவே உள்ளன. பெண்களுக்கு அவர்களின் உடல்கள் மீதே அவர்களுக்கு உரிமையில்லை. ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்தியல் தாக்கம் மருத்துவத் துறையினர் மீதும் செல்வாக்கு செலுத்துகிறது. இதனால், மருத்துவத் துறையில் உள்ள சில ஆண்கள்கூட தங்கள் குடும்பப் பெண்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் போக்கும் உள்ளது. நாம் வாழும் சமூக வாழ்நிலையே நமது சிந்தனைகளைத் தீர்மானிப் பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை மறக்கக் கூடாது.
சமஸ் குறிப்பிடும் “இந்திய மருத்துவச் சமூகம் கருக்கலைப்பை ஓர் அவமானகரமான விஷயமாகவே சமூகத்தின் மனத்தில் உருவாக்கிவைத்திருக்கிறது” என்பது முற்றிலும் தவறான கருத்து. பெரும்பாலான மருத்துவத் துறை யினருக்கு இதுபோன்ற கருத்து இல்லை. எனினும், மருத்துவத் துறையினரில் பிற்போக்கான கருத்துகள்கொண்ட ஒரு சிலர், கருக்கலைப்புக்காகத் தங்களை நாடிவரும் பெண்களைக் கேவலமாக நடத்துகிறார்கள்; புறக்கணிக்கிறார்கள் எனில் அதற்கும் அத்தகைய மருத்துவத் துறையினரிடம் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ள தவறான கருத்தே காரணமாகும்.
பாவச்செயலா?
கருக்கலைப்பு என்பதை ஒரு பாவச்செயலாகவும் கருக்கலைப்பு செய்வோரைப் பாவிகளாகவுமே நமது இலக்கியங்களும் மதங்களும் ஆணாதிக்கச் சமூகத்தின் கருத்தியலும் சித்தரிக்கின்றன. நமது புறநானூறு (புறம்-34) கருச்சிதைவு செய்வோரைப் பாவம் செய்தவர்களாகவே குற்றம்சாட்டுகிறது. கருக்கலைப்பு என்பது ஒரு கொலை, ஒரு பாவச்செயல் என்ற கருத்து நீண்ட காலமாக நம் சமூகத்தில் நிலவிவருகிறது. இதன் தாக்கம் நமது மருத்துவத் துறையில் உள்ள சிலரிடமும் இருக்கக்கூடும். இதற்கும் நமது சமூகமே பொறுப்பு.
தனியார்மயமும் காரணம்
கருக்கலைப்புக்காக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் பெண்களைத் தனியார் மருத்துவமனைகளுக்கு விரட்டும் போக்குக்கு அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலையே காரணம். அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக வட்டார மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் இந்தியா முழுவதும் 60% - 70% மகப்பேறு மருத்துவர் பணியிடங்கள், மயக்க மருத்துவர் பணியிடங்கள், அறுவை மற்றும் பொது மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், மருத்துவம் தனியார்மயமானதும் வணிகமயமானதும் கார்ப்பரேட்மயமானதும் இந்த நிலைக்குக் காரணம்.
தனியார் மருத்துவமனைகளிலும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளிலும் மிக அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் சூழலிலேயே கர்ப்பிணிகள் போலி மருத்துவர்களிடமும் அரைகுறை வைத்தியர்களிடமும் கருக்கலைப்புக்காகச் சென்று தங்களது இன்னுயிர்களை இழக்கின்றனர்.
பொதுவாகவே, மகப்பேறு சிகிச்சையைவிடக் கருக்கலைப்புச் சிகிச்சை என்பது மிகவும் சிக்கலானது, கடினமானது, ஆபத்தானது. அனுபவம் வாய்ந்த திறமை யான மருத்துவரிடம் சிறப்பான மருத்துவ வசதிகள் உள்ள சிறந்த மருத்துவமனைகளில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும். இதற்காகத் தனி மையங்களை மத்திய- மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். கருக்கலைப்பைப் பாதுகாப்பானதாக்கிட உரிய சட்டங்களையும் விதிமுறைகளையும் அரசு உருவாக்கிட வேண்டும். பாதுகாப்பான கருக்கலைப்புபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்திட வேண்டும். மருத்துவர்களைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றுவதை விட்டுவிட்டு இவற்றைத்தான் செய்ய வேண்டும்; இவையே கருக்கலைப்பு மரணங்களைத் தடுக்க ஆக்கபூர்வமான தீர்வுகளாக அமையும்.
- டாக்டர். ஜி. ஆர். இரவீந்திரநாத், பொதுச்செயலாளர், சமூகச் சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம், தொடர்புக்கு: daseindia@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT