Published : 23 Nov 2017 05:36 PM
Last Updated : 23 Nov 2017 05:36 PM
'இரட்டை இலை சின்னம்' ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு கிடைத்துவிட்டது. சின்னம் எங்களுக்குதான் எனக் கூறிவந்த டிடிவி.தினகரன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது 'குரங்கு கையில் கிடைத்த பூமாலை' எனப் பேசியுள்ளார்.
மகிழ்ச்சிப் பேட்டிகளும், சின்னத்தை மீட்டெடுப்போம் என்ற ஆவேசப் பேட்டிகளும் தருவதில் அணியினர் பரபரப்பாக இருக்கும் வேளையில், இந்தச் சின்னம் மக்கள் மத்தியில் மாறா ஈர்ப்பைப் பெற்றிருக்கிறதா இல்லை தமிழக தேர்தல் அரசியலில் சின்னம்தான் பிரதானம் என்ற சூத்திரமே உடைந்துபோகும் அளவில் இருக்கிறதா?
தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இரட்டை இலை சின்னம் இனிமேலும் இருக்குமா? விவாதிப்போம் வாருங்கள்.
சின்னம்.. சின்ன வரலாறு
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.
அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.
இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். மக்களைச் சந்திக்கும் போது கைகூப்புவதுபோல இரட்டை விரல்களைக் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர்.
இப்போதும்கூட ஊர்ப் பெரியவர்களிடம் போய், 'ஒங்க ஓட்டு யாருக்கு' என்றால் ரெட்ட இலதான்.. உதய சூரியந்தான் என்பார்கள். தமிழக அரசியலில் பிரிக்க முடியாதது வாக்குவங்கியும் சின்னமும். அப்பேற்பட்ட சின்னம் முடங்கிப்போனபோது உடைந்தபோன அடிமட்டத் தொண்டர்கள் ஏராளம்.. ஏராளம்.
மார்ச் மாதம் முடக்கப்பட்ட சின்னம் 7 மாதங்களுக்குப் பிறகு நவம்பரில் கிடைத்துள்ளது. இப்போது கிட்டியுள்ள 'சின்னம்' வெற்றி ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு அடுத்த தேர்தலில் எத்தகைய பலனைத் தரும்? உங்கள் கருத்துகளை இங்கே பகிருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT