Published : 30 May 2023 06:28 PM
Last Updated : 30 May 2023 06:28 PM

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த 3 பேர் கும்பல் கைது: ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து போலி பாஸ்போர்ட்கள், ஆவணங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் தரப்பு கூறியது: கடந்த 19ம் தேதி உதவி இயக்குநர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சென்னை மண்டல பிரிவு, சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சீட்டு கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பிரிவுக்கு முகமது ஷேக் இலியாஸ் என்பவர் கடவுச்சீட்டு மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்திருப்பதாகவும் அதற்கு தேவையான உபகரணங்களை வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி கடவுச்சீட்டு பிரிவில் வழக்குப்பதிவு செய்து முகமது ஷேக் இலியாஸை கைது செய்த போலீஸார், அவரை கடந்த 20ம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயார் செய்யும் ஏஜெண்டுகள் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கைதானவர்கள்

இவ்வழக்கில் தொடர்புடைய திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரை நேற்று (மே 29) கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது புகாரியிடம் இருந்து பாஸ்போர்ட்டுகள், பாஸ்போர்ட் தாள்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் போலியான ரப்பர் ஸ்டாம்புகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கணினி, UV light, Stamping Machine, மற்றும் 2 செல்போன்கள் உள்பட மொத்தம் 160க்கும் மேற்பட்ட வழக்கு சொத்துகளை கைப்பற்றினர்.

பாஸ்போர்ட் வாங்கி தரும் ஏஜென்டுகளிடம் பழைய பாஸ்போர்ட்கள் மற்றும் விசா பேப்பர்களை வாங்கி அதன் உள்பக்க தாள்களை பிரித்து எடுத்து தகுதியில்லாத இந்திய மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு போலியாக பாஸ்போர்ட்கள் மற்றும் விசா ஸ்டாம்ப்பிங் செய்து தந்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே, ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இதுதொடர்பாக கவனமாக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்வழக்கில் பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை கைது செய்து உபகரணங்களை கைப்பற்றிய மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி, போலி கடவுச்சீட்டு தடுப்பு பிரிவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x