Published : 29 May 2023 02:41 PM
Last Updated : 29 May 2023 02:41 PM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது ஆண் நண்பரால் பலரது கண் முன்னால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் ரோஹிணி ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கொலையின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உறுதியான மனம் கொண்டோரையும் உலுக்கிவிடும் அளவுக்கு அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கத்திக்குத்து, சிமென்ட் கல்லால் அடி: அந்த வீடியோவில் ஒரு சிறுமியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்துகிறார். அந்தச் சிறுமி சில குத்துகளிலேயே நிலைகுலைந்து அமர்ந்துவிடுகிறார். ஆனாலும், அந்த இளைஞர் விடவில்லை. அந்த இளைஞர் அப்பெண்ணை கத்தியால் திரும்பத் திரும்ப குத்துகிறார். ஒரு கட்டத்தில் கத்தி அச்சிறுமியின் தலையில் பாய்ந்துவிடுகிறது. அதை எடுக்கமுடியாமல் போகவே, அருகே இருந்த சிமென்ட் ஸ்லாபை எடுத்து அச்சிறுமியை கடுமையாக தாக்கினார்.
அப்போது, அந்தப் பகுதியில் நிறைய மக்கள் நடமாட்டம் இருக்கிறது. ஆனால், யாரும் அதைத் தடுக்க முன்வரவில்லை. சிசிடிவியில் பதிவாகியுள்ள கொலை ஏற்படுத்தும் பயத்தைவிட, அதைக் கடந்து வெறும் பார்வையாளர்கள் போல் செல்லும் மனிதர்களின் செயல் மிகுந்த பதற்றத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
காதல் விவகாரமா? - பதைபதைக்க வைக்கும் கொலையைச் செய்த நபரின் பெயர் ஷாஹில் என்பதும், சிறுமியின் பெயர் நிக்கி என்பதும் தெரியவந்துள்ளது. அவரும் கொலையான சிறுமியும் பழகிவந்துள்ளனர். கொலைக்கு ஒருநாள் முன்னர்தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாஹிலின் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடந்தது. அதில், கலந்துகொள்வதற்காக நிக்கி செல்லும் வழியில் அவரை வழிமறித்து ஷாஹில் கொலை செய்துள்ளார்.
உ.பி.யில் கைது: கொலைக்குப் பின்னர் தலைமறைவான ஷாஹிலை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஐபிசி 320 பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி நிக்கியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல் துறை செய்தித் தொடர்பாளர் சுமன் நால்வா கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் உறுதியாகிவிட்டதால் அவரை விரைவில் கைது செய்வோம். போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்" என்று கூறியிருந்த நிலையில், அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் டெல்லி கல்யாண்புரி பகுதியில் 18 வயது சிறுமி இதேபோல் ஆண் நண்பரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் நடந்த இச்சம்பவங்கள் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் குழு அமைத்தது தேசிய மகளிர் ஆணையம்: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்தச் சம்பவம் குறித்து துரிதமாக, நியாயமாக விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் டெலினா கொன்குப்த் தலைமையிலான மூவர் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் விசாரணை நடத்துவர். கூடவே, அவர்கள் டெல்லி காவல் துறையினரையும் சந்தித்து இந்த வழக்கை நியாயமாக, துரிதமாக விசாரிக்க் அறிவுறுத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவாலும் டெல்லி சம்பவத்துக்கு ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர், "டெல்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் ஓர் அப்பாவி சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வரம்பற்ற வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. என் பணிக்காலத்தில் தான் பார்த்திராத அளவிலான வன்முறை இது" என்று கூறியுள்ளார்.
முதல்வர் கேஜ்ரிவால் கருத்து: டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. அது துணைநிலை ஆளுநரின் அதிகாரத்துக்குள் வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டெல்லியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் வருத்தமானது, துரதிர்ஷ்டவசமானது. கிரிமினல்கள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். காவல் துறை மீதான பயம் போய்விட்டது. துணைநிலை ஆளுநர் அவர்களே, சட்டம் - ஒழுங்கு தங்கள் பொறுப்புதானே. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.
அவசரச் சட்டத்துக்கு பதிலடி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநருக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, டெல்லி அரசின் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே இருக்கும்படியாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு, சட்டம் - ஒழுங்கு பொறுப்பை வகிக்கும் துணை நிலை ஆளுநர் அதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார் கேஜ்ரிவால். இருப்பினும் ஒரு மாநில முதல்வர் இவ்வாறாக பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கக் கூடாது என்று அவருடைய ட்வீட்டின் கீழ் பலரும் கருத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...