Published : 20 May 2023 08:11 PM
Last Updated : 20 May 2023 08:11 PM
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதிய விபத்தில் சிக்கி 29 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து மற்றும் வேனின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை நோக்கி தனியார் பேருந்து இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ராமநாதபுரத்திலிருந்து ஒரு குடும்பத்தினர் வேனில் திருச்செந்தூருக்கு வந்து சுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, விருதுநகரில் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வி.எம். சத்திரம் ஆச்சிமடம் அருகே தனியார் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. வேன் மற்றும் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து அப்பளம்போல் நொறுங்கியது. இதில் பேருந்து மற்றும் வேனில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் காயமடைந்தனர்.
அவர்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து தெரியவந்ததும் அங்குவந்த போலீஸாரும் காயமடைந்தவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேனை ஓட்டிவந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி செல்வம் என்பவர் நீண்டநேர போராட்டத்துக்குப்பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார்.
இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து நடைபெற்ற இடத்தில் சாலை முழுக்க கண்ணாடி துகள்கள் சிதறியிருந்தன. இந்த விபத்து காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சிவந்திப்பட்டி போலீஸார் விசாரிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT