Published : 17 May 2023 05:26 PM
Last Updated : 17 May 2023 05:26 PM
மதுரை: மதுரையில் யோகா பயிற்சிக்கு வந்த ஜப்பான் நாட்டு பெண் காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை - நத்தம் சாலையில் சத்திரப்பட்டி அருகே மலையடிவாரத்தில் தனியார் ஆசிரமம் ஒன்று செயல்படுகிறது. இங்கு யோகா பயிற்சி, தியான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலம், நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தியான, யோகா பயிற்சிக்கென இங்கு வருகின்றனர். பயிற்சிகாக சில நாள் ஆசிரம வளாகத்தில் தங்கிச் செல்வது வழக்கமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினத்திற்கு முன்பாக யோகா பயிற்சிக்கென ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாய் சடோ (40) என்ற பெண் அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளார். அவர் 2 நாளுக்கு முன்பு வெளியே சென்றுவருவதாக கூறி போனவர் மீண்டும் ஆசிரமத்துக்கு திரும்பவில்லை. இது தொடர்பாக பாலமேடு போலீசில் ஆசிரம நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் போலீஸாரும் விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, ''சம்பந்தப்பட்ட ஆசிரமத்துக்கு ஜப்பான் நாட்டு பெண் யோகா வகுப்புக்கு வந்ததாக சொல்கின்றனர். அவர் 2 நாளுக்கு முன் மதுரை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வரவில்லை. இதன் காரணமாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நாங்களும் விசாரித்தோம். இதற்கிடையில், ஆசிரமம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்டபோது, ஓரிரு மணி நேரத்தில் ஆசிரமத்திற்கு திரும்பிவிடுவேன் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அது பற்றிய தகவலும் ஆசிரம நிர்வாகம் எங்களுக்கு தெரிவித்தது. ஒருவேளை அவர் திரும்பவில்லை என தெரிந்தால் வழக்குப் பதிவு செய்து மீட்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT