Published : 15 May 2023 10:05 PM
Last Updated : 15 May 2023 10:05 PM
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், ‘கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்த சாராய வேட்டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்டையில் 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 4,943 லிட்டர் சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது.
கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் 128 லிட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் கடத்த யன்படுத்தப்பட்ட ஓர் நான்கு சக்கர வாகனமும், 7 இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த 2023-ம் ஆண்டு இதுவரையிலும் 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,713 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4,534 பெண்கள் அடங்குவர். இந்த ஆண்டு இதுவரையிலும் 2,55,078 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கள்ளச் சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் இதுவரை 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேர் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டில் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் சம்பவத்தில் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவரும், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, "கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். | வாசிக்க > “கள்ளச் சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
இதனிடையே, கள்ளச் சாராய மரணங்களைத் தொடர்ந்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்களை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். | வாசிக்க > கள்ளச் சாராய வழக்குகள் சிபிசிஐடி-க்கு மாற்றம்; விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பிக்கள் சஸ்பெண்ட
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT