Published : 11 May 2023 07:27 AM
Last Updated : 11 May 2023 07:27 AM

பகுதி நேர வேலைவாய்ப்பு குறுஞ்செய்தி: ரூ.50-க்கு ஆசைப்பட்டு சைபர் மோசடியில் ரூ.39 லட்சத்தை இழந்த அதிகாரி

பிரத்நிதித்துவப் படம்

புனே: புனேயில் பன்னாட்டு பொறியியல் நிறுவனம் ஒன்றின் துணை பொது மேலாளர், சைபர் மோசடியில் ரூ.39 லட்சத்தை இழந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

இந்த மோசடி நிகழ்வு குறித்து புனே காவல்துறை கூறியதாவது: பகுதி நேர வேலைவாய்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றும் தனியார் நிறுவன துணை பொது மேலாளர் மொபைலுக்கு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி புதிய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்ததுள்ளது.

ஆர்வத்தின் காரணமாக அவர் அந்த இணைப்பைத் திறந்துள்ளார். தினமும் சில வீடியோக்களுக்கான இணைப்புகள் அனுப்பப்படும் என்றும் அந்த இணைப்புகளுக்குச் சென்று வீடியோக்களுக்கு விருப்பக்குறி இட்டால், ஒவ்வொரு விருப்பக்குறிக்கும் அவரது கணக்கில் ரூ.50 வரவாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல் நாளென்று அவருக்கு 18 வீடியோக்களின் இணைப்புகள் அனுப்பப்பட்டன. அனைத்து வீடியோக்களுக்கும் அவர் விருப்பக்குறி இட்டார். ஒரு வீடியோவுக்கு ரூ.50 என 18 வீடியோக்களுக்கு அவரது கணக்கில் பிடித்தங்கள் போக ரூ.825 வரவானது. இதனால் உற்சாகமடைந்த அந்த துணை பொது மேலாளருக்கு மறுநாளும் 18 வீடியோக்களுக்கான இணைப்புகள் அனுப்பட்டன.

இந்த முறை, இணைப்புகளை திறப்பதற்கு முன்பு மெசஞ்சர் செயலியில் ஒரு குழுமத்தில் இணைய வேண்டும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் இணைந்தார். அதையெடுத்து, அவருக்கு வேறு சில இணைப்புகள் அனுப்பப்பட்டன. அவற்றில் விருப்பக்குறி இடுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் அன்றைய வேலை முடிந்ததும் அவரது முன்பணத் தொகையின் அடிப்படையில் கூடுதல் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி கணக்கில் ரூ.40 லட்சம் வரவு

இதையடுத்து அவர் ரூ.16,800 பணத்தை அந்த குழுமத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கணக்குக்கு அனுப்பினார். அன்றைய வேலை முடிந்ததும் அவருக்கென்று தனி கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.27,650 வரவானது. மறுதினம், இதேபோல் ரூ.6.82 லட்சத்தை பரிவர்த்தனை செய்தார். வேலை முடிவில் அவரது கணக்கில் ரூ.9 லட்சம் வரவானது. இப்படியாக மொத்தமாக அவரது தனி கணக்கில் ரூ.40 லட்சம் வரவானது.

அவர் அந்தத் தனி கணக்கில் இருந்த பணத்தை தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குக் மாற்ற முயன்றார். தனிக் கணக்கில் வரவாகியுள்ள பணத்தை எடுக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சம் அனுப்ப வேண்டும் என்று அவருக்கு குறுஞ்செய்தி வந்தது. அவரும் ரூ.20 லட்சத்தை அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த கணக்குக்கு அனுப்பினார். அதன் பிறகும் அவரால், தன்னுடைய தனிக் கணக்கிலிருந்து ரூ.40 லட்சத்தை எடுக்க முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த அவர், சைபர் குற்றப் பிரிவை நாடினார். இந்த சைபர் மோசடியில் அவர் தன் சொந்தப் பணம் ரூ.39 லட்சத்தை இழந்துள்ளார். இவ்வாறு புனே காவல் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x