Published : 08 May 2023 08:22 PM
Last Updated : 08 May 2023 08:22 PM
சென்னை: சென்னையில் வரும் மே 10ம் தேதி நடைபெறவுள்ள சிஎஸ்கே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 13 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர்களிடமிருந்து 17 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை மற்றும் டெல்லி கேபிடல் அணியினருக்கிடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகின்ற 10.05.2023 அன்று நடைபெறுவதை முன்னிட்டு திங்கள்கிழமை (மே 8) டிக்கெட் விற்பனை நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.
அதன்பேரில், திருவல்லிக்கேணி (D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலஜா ரோடு சந்திப்பு, வாலாஜா ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேசன், பெல்ஸ் ரோடு, அஞ்சப்பர் உணவகம் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்து, அங்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் (33), யேசுராஜ் (34), இம்ரான் (25), கௌதம், (19), சண்முகம் (19), அசோக் குமார், (29), பூபதி (33), சிவா (35), அசோக் (30), விக்னேஷ் (21), பாலவிக்னேஷ் (25), மோகன் ராஜ் (30), விஜய் (28), ஆகிய 13 நபர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த 17 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.77,000 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி 13 நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT