Published : 08 May 2023 08:40 PM
Last Updated : 08 May 2023 08:40 PM
மதுரை: சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் தொடர்ந்து 10 பெண்களிடம் கைவரிசையைக் காட்டி திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (60). 4ம் தேதி திருவிழா பார்க்கச் சென்றபோது, எஸ்பி பங்களா அருகே அவரது 4 பவுன் நகை திருடுபோனது. மேலும், ரேஸ்கோர்ஸ் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சித்திரைத் திருவிழா பார்க்கச் சென்ற தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்த சங்கரேசுவரிடம் 7 பவுன் நகையும், ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே அதே 4ம் தேதி புதூரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் 3 பவுன் நகையும், டிஆர்ஒ காலனி பிள்ளையார் கோயில் அருகே புதூர் ஜவகர்புரத்தைச் சேர்ந்த சுந்தரி (60) என்பவரிடம் 5 பவுன் நகையும் திருடபட்டது.
இதைத்தொடர்ந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே சென்னை பணபாக்கம் சீத்தாம்மாளிடம் 4 பவுன், தொடர்ந்து அதே நாளில் தல்லாகுளம் பெருமாள் கோயில் பக்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய ஆத்திகுளம் ராமலிங்கம் மனைவி சண்முகவடி வேலுவிடம் 5 பவுன், ஆனையூர் நாகம்மாளிடம் 3 பவுன் , மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகத்திடம் 9 பவுன் , ஊமச்சிகுளம் திருமால்புரம் இதயதுல்லா மனைவி ரஜீத்திடம் 2 பவுனும் கூட்டத்தில் திருடுபோனது.
இச்சம்பவங்கள் குறித்து புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலு மனைவி வில்டா (62), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் மனைவி லதா (39) ஆகியோர் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியைச் சேர்ந்த செஞ்சில்தேவன் என்பவர் சித்திரை திருவிழா பார்த்துவிட்டு, கடந்த 6ம் தேதி யானைக்கல் பாலத்தில் சென்றபோது, அவரை அர்ஜூன் (18) என்பவர் வழிமறித்து, அவரது செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை பறிக்க முயன்றபோது, கையும் களவுமாக சிக்கியவர் விளக்குதூண் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT