Published : 05 May 2023 04:15 PM
Last Updated : 05 May 2023 04:15 PM
அலிகார்: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த யூடியூபர் அகஸ்தியா சவுகான் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 25.
சமூக வலைதளங்களில் தாக்கம் ஏற்படுத்துவதற்காக ஆபத்தான செயல்பாடுகளில் சில யூடியூபர்கள் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர்தான் அகஸ்தியா சவுகான். அவ்வாறு அதிவேகமாக சென்றபோதுதான் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அகஸ்தியா சவுகான் உத்தரப் பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவு வழிசாலை வழியே டெல்லிக்கு தனது இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சென்ற அவரது வாகனம் நிலை தடுமாறி யமுனா விரைவு வழிசாலையில் இருந்த வளைவுகளில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அகஸ்தியா சவுகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அகஸ்தியாவின் உடலை மீட்ட போலீஸார், அலிகாரில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல யூடியூபரான அகஸ்தியாவின் மரணம், அவரது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அகஸ்தியாவுக்கு யூடியூப் பக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதற்காக அகஸ்தியா மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டிருந்தன. போக்குவரத்து துறையின் எச்சரிக்கையை மீறி, அவர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அவ்வப்போது சாலைகளில் சாகசத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT