Published : 05 May 2023 07:05 AM
Last Updated : 05 May 2023 07:05 AM
சென்னை: பொதுமக்களிடம் ரூ.1000 கோடி வசூலித்து மோசடி செய்து, தலைமறைவாக உள்ள ஹிஜாவு நிதி நிறுவன நிர்வாகிகள் 15 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய ‘ஹிஜாவு அசோசியேட்ஸ்’என்ற நிதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு மாதம் 15 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியது.மேலும், தங்கள் நிறுவனத்துக்கென முகவர்களையும், பணியாளர்களையும் நியமித்து பல்வேறு ஊர்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்திபொதுமக்களை கவரும் வகையில் இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளனர்.
ரூ.1,046 கோடி மோசடி: எந்தவித சொந்த முதலீடும் இல்லாமல் முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கே மாத வட்டியைக் கொடுத்துள்ளனர். சிறிது காலம் கழித்து முதலீடு செய்தவர்களின் பணத்தைச்சுருட்டியுள்ளனர். இப்படி, தமிழகம் முழுவதும் 14,126 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,046 கோடி மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஹிஜாவு நிறுவனம் தொடர்புடைய 42 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவானார்கள். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் சவுந்தரராஜன், கலைச்செல்வி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நிறுவனத்தின் இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி, இனயா,கோவிந்தராஜுலு, சுஜாதா காந்தா, ரமேஷ், சுரேந்திரகுமார், முத்துகுமரன், முரளிதரன், சாமிசேகர் என்ற காலேப் சேகர், ராம்ராஜ், ஜெயகுமார், ஜெயசஞ்சுலு, துரைராஜ், ப்ரீஜாஆகிய15 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், இவர்களைத் தலைமறைவு குற்றவாளிகளின் எனக்குறிப்பிட்டு இவர்களின் புகைப்படங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று வெளியிட்டனர். இவர்களைப் பற்றிதகவல் தெரிந்தால் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு (adspeowhijau@gmail.comஅல்லது 044 22504332) தெரிவிக்கலாம் என்றும், உறுதியான தகவலாக இருந்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT