Published : 04 May 2023 04:22 PM
Last Updated : 04 May 2023 04:22 PM

தி.மலை அருகே ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் கைது

கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்ற பெண் தலைவர் வேண்டா மற்றும் அவரது கணவர் மணி

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே கீழ்பட்டு ஊராட்சியில், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும் அவரது கணவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (மே 4) கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு ஊராட்சி சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் தேவராஜ் மகன் எம்ஜிஆர். நெசவுத் தொழிலாளியான இவர், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தனக்கு சொந்தமான காலி மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீடு கட்டி முடிந்துள்ளார். இந்நிலையில், புதியதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி செலுத்துவதற்காக ஊராட்சி மன்ற நிர்வாகத்தை அணுகி உள்ளார்.

அப்போது பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்யப்பட்டது மற்றும் வீட்டுக்கு வரி விதிப்பதற்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற பெண் தலைவர் வேண்டா, அவரது கணவர் மணி ஆகியோர் கேட்டுள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் எம்ஜிஆர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல் துறையினரின் அறிவுரையின் பேரில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும் அவரது கணவர் மணி ஆகியோரிடம் ரூ.30 ஆயிரத்தை இன்று ( 4-ம் தேதி) கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான காவல் துறையினர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் வேண்டா மற்றும் அவரது கணவர் மணி ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x