Published : 30 Apr 2023 04:15 AM
Last Updated : 30 Apr 2023 04:15 AM
சேலம்: சேலம் அருகே மணல் கடத்தலை தடுத்த விஏஓ-வை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். மணல் கடத்தல் தொடர்பாக டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் ஒன்றியத்தில் மானத்தாள் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வினோத் குமார். இந்த கிராமத்தில் கட்டுமானத்துக்குத் தேவையான கரம்பை மணலை சிலர் கடத்தி வந்தனர்.
கடந்த 18-ம் தேதி மானத்தாள் கிராமம் தாண்டவனூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங்களை விஏஓ வினோத்குமார் பறிமுதல் செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சித்துராஜ், ஓட்டுநர் விஜி ஆகியோர் மீது தொளசம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விஏஓ மீது தாக்குதல்: இந்நிலையில், நேற்று முன்தினம் காலை விஏஓ வினோத்குமார் அலுவலகத் துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, மணல் கடத்தல் தொழில் செய்யும் சித்துராஜ், விஏஓ-வை வழிமறித்து தாக்கி செல்போனை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவரை வெட்ட அரிவாளுடன் விரட்டியுள்ளார். அங்கிருந்து தப்பிய விஏஓ தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்தார்.
டிராக்டர் ஓட்டுநர் கைது: இதன்பேரில், சித்துராஜ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தல், செல்போன் பறிப்பு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறனர். மேலும், மணல் கடத்தல் வழக்கில் டிராக்டர் ஓட்டுநரான பாரப்பட்டியைச் சேர்ந்த விஜி (35) என்பவரை நேற்று போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT