Published : 30 Apr 2023 10:20 AM
Last Updated : 30 Apr 2023 10:20 AM

ஆருத்ரா, ஹிஜாவு போல நூதன முறையில் மோசடி செய்ததாக ‘மோகா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் மீது புகார்

நூதன முறையில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்.

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவனங்கள் வரிசையில் நூதன முறையில் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அதிக வட்டி தருவதாகக் கூறி ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் முதலீடு பெற்று, பல கோடி ரூபாய் மோசடி செய்தது. இதுகுறித்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவந்த ‘மோகா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற ஏற்றுமதி நிறுவனமும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஒருமுறை முதலீடு செய்தால் மாதம்தோறும் வீடு தேடி மளிகைப் பொருட்கள் மொத்தமாக வரும். அதனைப் பிரித்து ‘பேக்கிங்’ செய்து வழங்கினால் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் வழங்கப்படும்.

ஓராண்டு முடிந்த பின்னர் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமாக அந்நிறுவன உரிமையாளர்கள் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தை நடத்திய தம்பதியர் ஒரு சில மாதங்கள் மட்டும் கமிஷன் தொகை வழங்கினர். மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று ஊழியர்கள் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அந்நிறுவனம் இயங்கி வந்த வீட்டை நேற்று முன்தினம் இரவு, ஊழியர்கள் காலி செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த பாதிக்கப்பட்ட மக்கள், ஊழியர்கள் சிலரை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பணத்தை மீட்டுத் தரவேண்டும்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று மதியம்திரண்டு, தங்களை ஏமாற்றியவர்களைக் கைது செய்ய வேண்டும், தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனித்தனியாக புகார் மனு

இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ, காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தருவோம் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வசம் இந்த வழக்கு விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x