Published : 26 Apr 2023 12:02 PM
Last Updated : 26 Apr 2023 12:02 PM

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கள்ளக்குறிச்சி அருகே போலீஸார் பத்திரமாக மீட்டனர். மேலும், குழந்தையைக் கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்

ஒடிசாவைச் சேர்ந்தவர் அர்ஜூன் குமார் (26). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி கமலினி (24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்கள். கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ஆம் தேதி பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினியின் அருகில் கருச்சிதைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் ஒருவரும் இருந்துள்ளார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தைகளை கவனித்து வந்து அவருக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் உமா உதவி செய்து வந்ததால், அர்ஜூன்குமார் நேற்று வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே மாலை வேலை முடிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் மனைவி கமலினியிடம் குழந்தையைக் கேட்டுள்ளார். அப்போது உமா இன்குபேட்டரில் சிகிச்சை அளிக்க குழந்தையை கேட்டதாகக் கூறி வாங்கிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். அருகில் சிகிச்சை பெற்று வந்த எஸ்தர் ராணியும் காணவில்லை.

இதனால் சந்தேகமடைந்து சிகிச்சை அளிக்கும் இடத்திற்கு சென்று அர்ஜூன் குமார் பார்த்த போது அங்கு உமாவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அர்ஜூன் குமார் இது குறித்து செவிலியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் குழந்தையைக் காணவில்லை எனவும், அருகில் இருந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தை கடத்தல் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் குறித்தும் விசாரணை நடத்தினர். அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் அவர்கள் கொடுத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மேலும், விழுப்புரத்தில் அந்த எண் கடைசியாக ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் அவர்கள் தான் குழந்தையைக் கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஏற்கெனவே ஒரு குழந்தை கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே குழந்தை கடத்திச் சென்றதாக பெண் ஒருவர் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டு தேடி வந்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்களைப் பிடிக்க 3 தனிப்படையும் அமைத்தனர்.

இதனிடையே, உதவி செய்வது போல் நடித்து குழந்தையைக் கடத்திச் சென்ற உமா என்பவரை கள்ளக்குறிச்சி அருகே போலீஸார் மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் உமாவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ள காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x