Published : 22 Apr 2023 05:15 PM
Last Updated : 22 Apr 2023 05:15 PM

பல்லடம் அருகே காவலர் போல் நடித்து இளம்பெண்ணை கடத்தியவர் கைது

பல்லடம் அருகே காவலர் என்று கூறி இளம்பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசன்.

திருப்பூர்: பல்லடம் அருகே காவலர் எனக் கூறி 3 வாரங்களுக்கு முன்பு, இளம்பெண்ணை காதலனிடம் இருந்து கடத்திச் சென்றவரை பல்லடம் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (21). இவர் அந்தப் பகுதியை அதே வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இந்த நிலையில் காதலர்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 6-ம் தேதி சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பல்லடம் அருகே வந்தபோது, அவர்களது இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து மற்றொரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். மேலும், அவர் காவலர் என்றும், உங்களை பார்த்தால் சந்தேகமாக உள்ளது, தனித்தனியாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரோபாஸ்டனை இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கி.மீ தூரம் வரை அழைத்து சென்று பல்லடம் - திருச்சி சாலையில் உள்ள மாதப்பூர் கருப்பசாமி கோயில் அருகே நிற்க வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு அழைத்து சென்றார்.

காவலர் என்று கூறிய இளைஞர் மீது சந்தேகமடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த நிலையில், காதலி கடத்தப்பட்டது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட இளம்பெண், மதுரையில் அந்த நபர் இறக்கிவிட்டுவிட்டு சென்றதை தனது காதலனுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் இளம்பெண்ணை மீட்டனர். ஆனால் கடத்தலில் ஈடுபட்ட நபர் சிக்கவில்லை. கடத்தப்பட்ட இளைஞரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், காவலர் என்று கடத்தலில் ஈடுபட்ட நபரை பல்லடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “திருப்பூர் வாய்க்கால்மேடு கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (33). கிடைக்கும் கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் காவலர் என்று கூறி, இளம்பெண்ணை கடத்தி உள்ளார். அலைபேசி மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதனை செய்துள்ளார். ஏற்கெனவே கணேசன் மீது திருப்பூர் மாநகரில் ஆள் கடத்தல், இருசக்கர வாகனத்திருட்டு என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், காவலர் என்று கூறி, இவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதனை செய்துள்ளார். இதையடுத்து இருசக்கர வாகன எண்ணை கொண்டு போலீஸார் கணேசனை கைது செய்தனர். இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x